×

தமிழக அமைச்சரவை கூட்டம் 13ம் தேதி நடக்கிறது :இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசனை

சென்னை:தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 13ம் தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 2ம் தேதி  கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்ற கூட்டத்தை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. இந்த  கூட்டத்தில், ஜெயலலிதா பெயரில் புதிய பல்கலைக்கழகம், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் 10 ஆண்டு சிறை தண்டனை உள்ளிட்ட 8 சட்ட மசோதாக்களும் தாக்கல்  செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.இந்நிலையில், இந்த மாத இறுதியில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து விவாதிக்க முதல்வர் எடப்பாடி  பழனிசாமி தலைமையில் நாளை மறுதினம் (13ம் தேதி) காலை சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும்  பங்கேற்க வேண்டும் என்று இன்று கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை எந்த தேதியில் தாக்கல் செய்யலாம் என்பது குறித்தும், தற்போதைய சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடர் என்பதாலும், இரண்டு  மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளதாலும் மக்களுக்கு என்னென்ன கவர்ச்சி திட்டங்கள் அறிவிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.அநேகமாக வருகிற 22ம் தேதி (திங்கள்) அல்லது 25ம் தேதி (புதன்) தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது.

13ம்தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

பிரதமர் மோடி வருகிற 14ம் தேதி (ஞாயிறு) சென்னை வருகிறார். முன்னதாக 13ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. 13ம் தேதி மாலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை  முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், சென்னை வரும்  பிரதமர் மோடிக்கு அதிமுக சார்பில் பிரமாண்ட வரவேற்பு கொடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.



Tags : Tamil Nadu ,meeting ,Consultation ,Cabinet , அமைச்சரவை
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...