வாக்குபதிவு இயந்திரங்களை பாதுகாக்க நவீன வசதிகளுடன் புதிய கிடங்கு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக ஊட்டி பிங்கர்போஸ்ட் கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நவீன வசதிகளுடன் புதிய கிடங்கு கட்டப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தை பொருத்த வரை ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 3 தொகுதிகளிலும் ஏற்கனவே 683 வாக்குசாவடி மையங்கள் இருந்த நிலையில், கொேரானா கால கட்டம் என்பதால் வாக்குசாவடிகளின் எண்ணிக்கை 903 ஆன அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, 684 வாக்குபதிவு இயந்திரங்கள் உள்ள நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்துவதற்காக கடந்த டிசம்பர் மாதம் மகாராஷ்ட்ரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் இருந்து கூடுதலாக 1860 வாக்குபதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரம் ஆகியவை கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தற்போது, நீலகிரியில் 3911 வாக்குபதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபேட்கள் உள்ளன. இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தலின்போது பயன்படுத்தப்படும் வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்க கிடங்கு வசதி இல்லாத நிலையில் ஊட்டி தாசில்தார் அலுவலகம் வைக்கப்பட்டு வந்தது.

அதன்பின், பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகம் கட்டப்பட்ட பின்பு அங்குள்ள ஒரு கட்டிடத்தில் கிடங்கு அமைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதனிடைேய, பிங்கர்போஸ்ட் கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாக்குபதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக நவீன வசதிகளுடன் கூடிய கிடங்கு கட்டப்பட்டு வருகிறது. ஊரடங்கிற்கு முன்பே இப்பணிகள் துவங்கிய நிலையில், கொரோனா காரணமாக முழுமையாக நிறைவடைவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது, 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. இங்கு வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கும் அறை, சிசிடிவி கேமரா கண்காணிப்பு அறை, கிடங்கிற்கு பாதுகாப்பு அளிக்கும் காவலர்கள் தங்கும் அறை ஆகியவை கட்டப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்து அடுத்த மாதத்திற்குள் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது.

Related Stories:

More
>