×

சேரம்பாடி வனப்பகுதியில் மயக்க ஊசி செலுத்தியும் ஆட்கொல்லி யானை `எஸ்கேப்’

பந்தலூர்: பந்தலூர் அருகே சேரம்பாடி வனச்சரகத்தில் 3 பேரை கொன்ற ஆட்கொல்லி யானைக்கு நேற்று மயக்க ஊசி செலுத்தியும் மீண்டும் எஸ்கேப் ஆனது. சேரம்பாடி வனச்சரகம் சேரம்பாடி கண்ணம்பள்ளி பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் ஒரு முதியவரையும், கொளப்பள்ளி டேன்டீ பகுதியில் தந்தை, மகன் இருவரையும் யானை தாக்கி கொன்றது. இதனால், பொதுமக்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, அந்த யானையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, முதுமலையில் இருந்து கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டு வன உயிரின மருத்துவர்கள் மூலம் ஆட்கொல்லி யானைக்கு மயக்க ஊசி செலுத்தி கண்காணித்தனர்.

ஆனால், அந்த யானை திடீரென மாயமானதால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். யானையை கண்காணிப்பதற்காக விருதுநகரில் இருந்து சிறப்பு வனக்குழுவினர் வரவழைக்கப்பட்டு கண்காணித்தபோது 50 நாட்களுக்குப்பின் மீண்டும் சேரம்பாடி சப்பந்தோடு வனப்பகுதியில் அந்த யானை கூட்டத்துடன் இருப்பது தெரியவந்தது. 2வது முறையாக ஆட்கொல்லி யானையை பிடிப்பதற்கு முதுமலையில் இருந்து 5 கும்கி யானைகளையும் கோவை சாடிவயலில் இருந்து ஒரு கும்கி யானையும் அழைத்து வரப்பட்டு யானையை பிடிப்பதற்கு வனத்துறையினர் களம் இறங்கினர்.

நேற்று முன்தினம் வரை யானையை கண்காணித்து மயக்க ஊசி செலுத்துவதற்கு மருத்துவ குழுவினர் முயற்சி செய்து வந்தனர். நேற்று சேரம்பாடி அருகே சப்பந்தோடு புஞ்சகொல்லி சுடுகாடு பகுதியில் யானை இருந்ததை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். பின்னர், கால்நடை மருத்துவர் மனோகரன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினார். இதைத்தொடர்ந்து, கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு மயக்கமடைந்த யானையை பிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் ஆட்கொல்லி யானை அங்கிருந்து தப்பித்து காப்பிக்காட்டுக்கு சென்றதால் வனத்துறையினர் மீண்டும் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : forest ,Serampore , Killer elephant 'escapes' in Serampore forest
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...