×

குஜிலியம்பாறை அருகே பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது: விடுமுறையால் அசம்பாவிதம் தவிர்ப்பு

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அருகே ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் முன்பகுதி சிலாப் மேற்கூரை நேற்று இடிந்து விழுந்தது. பள்ளி விடுமுறையால் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே ஆர்.கோம்பை ஊராட்சி ஆணைக்கவுண்டன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 25 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஒரு தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர் என இரண்டு பேர் பணிபுரிகின்றனர். இப்பள்ளி கடந்த 1996-97ம் ஆண்டு கட்டப்பட்டது. கடந்த 2018-2019ம் ஆண்டு பராமரிப்பு பணி செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று காலை இப்பள்ளியின் முன்பகுதி கட்டிடத்தின் சிலாப் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த கட்டிடத்தில் சிமெண்ட் கலவைகள் முழுவதும் பெயர்ந்து, கம்பிகள் முழுவதும் வெளியே தெரிந்தபடி உள்ளது. பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி விடுமுறை தினமாக உள்ளதால் மாணவ, மாணவியர் அசம்பாவித சம்பவத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினர். எனவே குஜிலியம்பாறை ஒன்றியத்தில் மிகவும் பழுதடைந்துள்ள பள்ளி கட்டிடங்களை கண்டறிந்து, பராமரிப்பு பணி செய்ய மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : school ,vacation ,Kujiliampara , The roof of the school near Kujiliampara collapsed: Avoidance of vacation
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி