உயிருடன் இருக்கும் வரை மேற்கு வங்கத்தில் பாஜகவை அனுமதிக்க மாட்டேன்.. வாழும் வரை நான் ‘ராயல் பெங்கால்’ புலி : மம்தா பானர்ஜி விளாசல்!!

கொல்கத்தா:வாழும் வரை நான் ‘ராயல் பெங்கால்’ புலியாக தான் இருப்பேன் என்று பாஜகவுக்கு எச்சரிக்கை விடும் வகையில் மம்தா பானர்ஜி பேசினார். மேற்குவங்க தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே அரசியல் தலைவர்களின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது. பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன் ஹால்டியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆட்சிக்கு எதிராக பேசினார். அப்போது, ‘மேற்குவங்க அரசு அதன் ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்கவில்லை’ என்றார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முர்ஷிதாபாத்தில் நடைபெற்ற பேரணியில் பேசிய மம்தா பானர்ஜி, ‘பிரதமர் மோடியின் கூற்றை மறுக்கிறேன். மத்திய அரசு பிஎஸ்என்எல், ரயில்வே, காப்பீட்டு நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து வருகிறது. கடந்த ஆண்டு மாநிலத்தைத் தாக்கிய கடுமையான சூறாவளி புயலைச் சமாளிக்க மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை. கொரோனா தொற்றுநோயைக் கையாள்வதற்கான உதவியை மத்திய அரசு அளிக்கவில்லை.

மேற்கு வங்கத்தில் தேசிய குடிமக்கள் பதிவு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை செயல்படுத்த அனுமதிக்க மாட்டேன். குஜராத் மக்கள் (மோடி, அமித் ஷா) மேற்குவங்காளத்தை ஆள மாட்டார்கள்; திரிணாமுல் காங்கிரஸ் தான் வங்காளத்தை ஆட்சி செய்யும். நான் பலவீனமாக இருக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். நான் யாருக்கும் அஞ்ச வேண்டியவள் அல்ல. நான் வலிமையானவள்; எப்போதும்  என் தலையை உயர்த்தி வைத்திருக்கிறேன். வாழும் வரை, நான் ‘ராயல் பெங்கால்’  புலி போன்றுதான் இருப்பேன்’ என்று பேசினார்.

Related Stories:

>