×

கலப்பு மருத்துவமுறையை ரத்து செய்யக்கோரி விழுப்புரத்தில் மருத்துவர்களின் இருசக்கர வாகன பேரணி தொடக்கம்

விழுப்புரம்: கலப்பு மருத்துவமுறையை ரத்து செய்யக்கோரி விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி மருத்துவர்களின் இருசக்கர வாகன பேரணி தொடங்கியது. ஆயுர்வேத மருத்துவர்கள் இனி அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் மற்றும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளது.

ஆயுர்வேத மருத்துவர்கள் இனி அறுவை சிகிச்சை செய்வதற்கு வசதியாக இந்திய மருத்துவ கவுன்சில் வழிகாட்டுதலில் புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக ஆயுர்வேத மருத்துவம் படிப்பவர்களுக்கு முறையான பயிற்சியை அவர்களது பாடத் திட்டத்தில் சேர்க்கவும், அது ஆயுர்வேதம் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது.

இந்த திருத்தத்தின்படி, பொதுவான அறுவை சிகிச்சை, பல், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட 58 வகையான நவீன அறுவை சிகிச்சைகளை பட்டியலிட்டு ஆயுர்வேத மருத்துவர்களும் அந்த அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது. இதற்காக இந்திய மருத்துவக் கவுன்சில் (ஆயுர்வேத முதுகலை படிப்பு) ஒழுங்குமுறை சட்டம் 2016-ல் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அறுவை சிகிச்சை முறைகள் நவீன மருத்துவத்தை சார்ந்துள்ளதால் இந்த நடைமுறையால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த கலப்பு மருத்துவ முறையை ரத்து செய்யக்கோரி மருத்துவர்கள் பலகட்ட போராட்டங்களை நடத்திவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி மருத்துவர்கள் இருசக்கர வாகன பேரணி மேற்கொண்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தொடங்கிய பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். விழுப்புரத்தில் இருசக்கர வாகன பேரணியை தொடங்கிய மருத்துவர்கள் திண்டிவனத்தில் மற்ற குழுவினருடன் இணைகின்றனர். மண்டல வாரியாக இணைந்து சென்னையை நோக்கி மருத்துவர்கள் இருசக்கர வாகன பேரணியை முன்னெடுத்து வருகின்றனர்.


Tags : Doctors ,rally ,Viluppuram ,abolition , Doctors' two-wheeler rally begins in Viluppuram demanding abolition of mixed medicine
× RELATED திருவாடானையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி