மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை!: உத்தரவில் கையெழுத்திட்டார் அதிபர் ஜோ பைடன்..!!

வாஷிங்டன்: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிப்பதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். தென் கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் நவம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் புதிய நாடாளுமன்றம் கடந்த 1ம் தேதி கூட இருந்த நிலையில், அதிரடியாக ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறிய ராணுவம், ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டு அதிகாரத்தை கைப்பற்றியது. மேலும் ஆட்சி கவிழ்ப்பு நடத்தியதுடன் மூத்த நிர்வாகி ஆங் சான் சூகி மற்றும் மூத்த அரசியல் தலைவர்களை கைது செய்தது.

இதற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுத்து, கைது செய்து வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் தலைவரான ஆங் சான் சூ கி உள்ளிட்டவர்களை விடுதலை செய்யக்கோரி போராட்டங்களை நடத்துகின்றனர். இந்நிலையில் ராணுவ ஆட்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மியான்மரின் ராணுவ தலைவர்கள் மீது பொருளாதார தடை விதிக்கும் உத்தரவுக்கு கைழுத்திட்டிருக்கிறார். மியான்மரில் ராணுவ ஜெனரல்கள், அமெரிக்காவில் ஒரு மில்லியன் டாலர் சொத்துக்களை கையாள்வதற்கு தடை விதிப்பதாக ஜோ பைடன் கூறியிருக்கிறார்.

மேலும் பல நடவடிக்கைகள் வரவிருப்பதாக குறிப்பிட்ட ஜோ பைடன், ராணுவம் கைப்பற்றிய அதிகாரத்தை கைவிட்டு மியான்மர் மக்களின் விருப்பத்திற்கு மரியாதை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். புதிய பொருளாதார தடைகள் மியான்மரின் ராணுவ தலைவர்களுக்கு பயனளிக்கும் அமெரிக்க சொத்துக்களை முடக்குவதற்கு தனது நிர்வாகத்தை அனுமதிக்கும் என்றும் ஜோ பைடன் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, மியான்மர் ராணுவத்தின் முக்கியத் தலைவர்கள் மீதான நடவடிக்கைகளை இன்று அறிவிக்கிறேன். மியான்மர் அரசுக்கு அமெரிக்கா அளித்த நிதியை ராணுவம் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராணுவத்தின் முக்கியத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கிறேன். இது அவர்களது குடும்பத்தினர் மீதும் அடங்கும் என்று தெரிவித்தார்.

Related Stories:

>