×

தெற்கு பசுபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!: ஆஸி., நியூசிலாந்தில் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை வாபஸ்..!!

சிட்னி: தெற்கு பசுபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிஜி, வனுட்டு ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் திரும்பபெறப்பட்டது. தெற்கு பசுபிக் கடலில் நியூ கலிடோனியாவின் கிழக்கு பகுதியில் இருந்து 415 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்கடலில் நேற்று நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 7.7 ஆக பதிவானதால் சுனாமி அலைகள் எழக்கூடும் என்று ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிஜி, வனுட்டு ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க நிலவியல் ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

நியூசிலாந்து தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் கடலோரப் பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு விரைவாக செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளது. 7.7. ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், நிச்சயம் சுனாமி அலைகளை எதிர்பார்க்கலாம். ஆதலால், கடற்பகுதிகள், துறைமுகங்கள், ஆறுகள், கடல்முகத்துவாரங்களில் இருக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என எச்சரித்தது. சுனாமி அலைகள் கடலில் உருவாவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஆஸ்திரேலிய வானிலை மையமும் தெரிவித்தது.

இருப்பினும் எதிர்பார்த்தபடி கடலில் பேரலைகள் எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து வடக்கு கிரேட் பேரியர் தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறுவதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இருப்பினும் மக்கள் கடல் பகுதிக்கு செல்லாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளும் சுனாமி எச்சரிக்கையை திரும்ப பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : earthquake ,Aussie ,South Pacific ,New Zealand , South Pacific, earthquake, Aussie, New Zealand, tsunami alert, withdrawal
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்