×

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தேசிய வங்கிகளில் பெற்ற விவசாய கடன்களும் ரத்து: தேனியில் உதயநிதி ஸ்டாலின் உறுதி

தேனி: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தேசிய வங்கிகளில் பெறப்பட்டுள்ள விவசாய கடன்களும் ரத்து செய்யப்படும் என, தேனி அருகே நடந்த பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தேனி வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட  போடி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளில் நேற்று பிரசாரம் செய்தார். பழனிசெட்டிபட்டி, கோடாங்கிபட்டி பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: போடி தொகுதி எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம் டீக்கடை நடத்தியவர். இன்றைக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனங்களுக்கு சொந்தக்காரராக இருந்து வருகிறார். வீட்டுக்குள் ஓபிஎஸ்சுக்கும், அவரது மகன் ரவீந்திரநாத்துக்கும் பாஜவுக்கு யார்  பெரிய அடிமையாக இருப்பது என்பதில் போட்டா போட்டி உள்ளது.

கொரோனா ஊரடங்கின்போது  ஆறு மாத காலம் மக்கள் வெளியே வர முடியாமல் சிரமப்பட்டனர். ஆனால் தேனி எம்பி ரவீந்திரநாத் மொரீசியஸ் தீவுக்கும், மாலத்தீவுக்கும்  சென்றார். அவர் கொள்ளையடித்த பணத்தை பதுக்கி வைப்பதற்காக அங்கு சென்றார். திமுக ஆட்சியின்போது விவசாயக்கடன் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் மட்டுமல்ல; தேசிய வங்கிகளில் பெறப்பட்டுள்ள விவசாய கடன்களும், மாணவர்கள் பெற்றுள்ள கல்விக்கடன்களும் ரத்து செய்யப்படும்.

சசிகலாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் இபிஎஸ்சும்  ஓபிஎஸ்சும் துரோகம் செய்து விட்டனர். ஒரு அமைச்சர், ‘ஜெயலலிதா உயிரோடு இருந்தால்கூட இவ்வளவு அழகாக ஜெயலலிதாவுக்கு சமாதி கட்டியிருக்க மாட்டார்’ என்கிறார்.  சட்ட அமைச்சர் சண்முகம், மக்கள் பணத்தை கொள்ளையடித்து சிறைக்கு சென்றவர் சசிகலா என்று செய்தியாளர்களிடம் கூறுகிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளி ஜெயலலிதா என்பதை மறந்து பேசுகிறார் என்றார்.

Tags : DMK ,banks ,Stalin ,Theni ,Udayanithi , DMK rule, agricultural credit, cancellation, Theni, Udayanithi Stalin, confirmed
× RELATED ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும்...