×

தஞ்சை அருகே குடோனில் அடைத்து வைத்ததால் வீண்: 50 லட்சம் நிவாரண பொருட்கள் குழிதோண்டி புதைத்த அவலம்

ஒரத்தநாடு: கடந்த 2018ம் ஆண்டு இறுதியில் வீசிய கஜா புயலால் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 4 லட்சத்து 68 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்பட 27 அத்தியாவசிய பொருட்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகமும், கூட்டுறவு சங்கங்களும் கொள்முதல் செய்து விநியோகம் செய்தது. இதுதவிர தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் வழங்கிய பால்பவுடர், பெண்களுக்கான நாப்கின், பிளாஸ்டிக் பொருட்கள் போன்ற பல்வேறு பொருட்களை அரசு பெற்று ஒவ்வொரு தாலுகா அலுவலகத்தில் வைத்தும் விநியோகம் செய்யப்பட்டது.

அதன்படி, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவிற்கு உட்பட்ட 58 ஊராட்சிகளில் விடுபட்டவர்களுக்கு வழங்குவதற்காக தாலுகா அலுவலகத்தில் உள்ள குடோனில் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்த நிவாரண பொருட்களை தாலுகா அலுவலகத்தில் வைக்க போதிய இடமில்லாத நிலையில் ஒரத்தநாடு புதூர் பஞ்சாயத்து அலுவலகம் அருகிலுள்ள இரண்டு பெரிய அறைகளில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்காமல் பூட்டி வைத்திருந்ததால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியுள்ளது.

தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வீணாகி துர்நாற்றம் வீசியது தெரியவந்தது. இதையடுத்து அறையின் பின்புறம் 50அடி ஆழத்திற்கு குழிதோண்டி வீணாகி போன பொருட்களை அதில் போட்டு புதைத்தனர். இதன் மதிப்பு 50 லட்சமாகும். இதுகுறித்து ஒரத்தநாடு தாசில்தார் கணேஷ்வரன் கூறுகையில், வீணாகிப்போன பொருட்களை அப்புறப்படுத்தி விட்டு மீதமுள்ள பொருட்களை பாதுகாப்பான இடத்தில் இடம் மாற்றி வைத்துள்ளோம் என்றார்.

Tags : Thanjavur ,pit , Tanjore, relief supplies, shame
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தேர்தலில் 100%...