×

அமைதியாக இல்லை... கிழிகிழியென்று கிழிக்கிறேன்: அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் விஜயதரணி

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் பலம் குறைந்து வருவதாக அரசியல் கட்சியினர் தொடர்ந்து விமர்ச்சனம் செய்து வருகிறார்களே? வரும் சட்டமன்ற தேர்தலில் எந்த அளவுக்கு வெற்றி வாய்ப்புள்ளது?  

மற்ற கட்சியினர் என்ன வேண்டுமானலும் விமர்ச்சிக்கலாம். ஆனால் காங்கிரஸ் கட்சி 2019ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உட்பட 10 தொகுதியில் போட்டியிட்ட போது 9 தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறோம். அதை தான் நாம் மனதில் எடுத்துக் கொள்ள வேண்டும். இது ஒரு ஆண்டுக்கு முன்பு நடந்த தேர்தல். அதனால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி எந்த வகையிலும் பலம் குறைந்ததாக இல்லை. சொல்லப் போனால் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மிகப் பெரிய பலத்தை பெற்றுள்ளது.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பேசுவதாக அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படுகிறதே?

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மொத்தம் இப்போது இருக்கிறதே 7 பேர் தான். எனக்கு தெரிந்து அதில் ஒருவர் கூட அப்படி செயல்படுவதாக கூற முடியாது. ஏனென்றால் அனைவரையும் பெர்சனலாக எனக்கு நன்றாக தெரியும். கட்சியின் கொறடா என்ற முறையில் சொல்கிறேன். 7 பேரும் கூட்டணி கட்சியின் செயல்பாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளோம். ராஜிவ் காந்தி படுகொலை சம்பவம் தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் திமுகவுடன் இணைந்து பயணித்துள்ளோம். கூட்டணி கட்சி எடுக்கக்கூடிய அனைத்து முடிவுகளுக்கும் ஒத்துழைப்பு கொடுத்துள்ளோம். இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. இதனால் ஆளுங்கட்சியுடன் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு இல்லை.


எப்போதும் எதையும் எதிர்த்து பேசக்கூடிய விஜயதரணி கட்சி ரீதியாக இப்போது அமைதியாக செயல்படுவது போல் கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறதே?

இப்போது கூட சட்டசபையில் விவசாயிகளுக்கு ஆதரவாக தலையில் டர்பன் கட்டி வந்தேன். கட்சியில் எனக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை. இப்போது நான் தேசிய நிர்வாகியாக செயல்படுவதால் எனக்கென்று ஒதுக்கப்பட்ட மாநிலத்தில் பரபரப்பாக தான் செயல்படுகிறேன். மத்திய பாஜ அரசின் செயல்பாடுகளை மேடைகளில் கிழி கிழி என்று கிழித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.

வரும் சட்டமன்ற தேர்தலில் உங்களுக்கு சீட் கிடைக்க வாய்ப்புள்ளதா? எம்பி சீட்டுக்கு முயற்சி செய்வதாக பேசப்படுகிறதே? வெளியில் இருந்து வந்தவர்களுக்கு சீட் கொடுக்க கூடாது என்ற வழக்கமான குரல்களும் குமரியில் ஒலிக்கிறதே?

1996 முதல் நான் எம்பி சீட் வேண்டும் என்று கேட்டுக் கொண்டு தான் இருக்கிறேன். கட்சி தலைமை எம்எல்ஏ சீட் இருமுறை கொடுத்து என்னை அங்கீகாரப்படுத்தியுள்ளனர். எம்பி சீட் கொடுத்தால் மகிழ்ச்சி. அப்படி இல்லை என்றாலும் சிட்டிங் எம்எல்ஏ என்பதால் மீண்டும் வாய்ப்பு கொடுப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. தமிழகத்திலே தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்ற ஒரே ஒரு பெண் நான் தான். அதேநேரம் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். வெளியில் இருந்து வந்தவர்களுக்கு சீட் கொடுக்க கூடாது என்று சிலர் தான் சொல்கிறார்கள். உள்கட்சியில் தங்களுக்கு அந்த சீட் வேண்டும் என்று முயற்சிப்பவர்கள் தான் இப்படி சொல்லி வருகிறார்கள். எதிர்பார்ப்பில் இருக்கும் சிலர் இதுபோன்ற புரளிகளை கிளப்பதான் செய்வார்கள். அதை பற்றி நான் கவலைப்படமாட்டேன்.

Tags : Vijayatharani ,All India Mahila Congress , Congress, Vijayatharani
× RELATED விஜயதரணிக்கு பாஜகவிலும் மக்களவை சீட் இல்லை!