×

சி.வி.சண்முகம் ஆண் மகனாக நின்று சசிகலாவுக்கு பதிலடி கொடுக்கிறார்: அதிமுக தொண்டர்கள் பாராட்டு

அமைச்சர் சி.வி.சண்முகம் ஆண் மகனாக, ஒன்மேன் ஆர்மியாக நின்று சசிகலாவுக்கு பதிலடி கொடுப்பதாக அதிமுக தொண்டர்கள் பாராட்டி வருகிறார்கள். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு சிறையில் இருந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா நேற்று முன்தினம் 23 மணி நேர பயணத்துக்கு பிறகு சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில் சசிகலா, பெங்களூரு மருத்துவமனையில் இருந்து பண்ணை வீட்டுக்கு செல்லும்போது அதிமுக கொடி கட்டிய காரில் பயணம் செய்தார். அதிமுக உறுப்பினராகவே இல்லாத ஒருவர் எப்படி அதிமுக கொடியை பயன்படுத்தலாம் என்ற விமர்சனம் எழுந்தது.

இதனால் சசிகலா மீது சென்னை டிஜிபி அலுவலகத்தில் கடந்த வாரம் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் நேரில் சென்று புகாரும் அளித்தனர்.பின்னர் பேட்டி அளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக உறுப்பினரே இல்லாத ஒருவர் எப்படி அதிமுக கொடியை பயன்படுத்தலாம்? ஊர் பணத்தை கொள்ளையடித்து, சொகுசாக வாழ்ந்து, தண்டனை அனுபவித்து விட்டு வந்துள்ள சசிகலா எப்படி அதிமுக கட்சி கொடியை பயன்படுத்தலாம்’ என்று ஆவேசமாக கூறினார். அமைச்சரின் இந்த கருத்து அதிமுக கட்சியினரிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
அமைச்சர்கள் புகார் அளித்ததையும் மீறி, சசிகலா நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து சென்னை வந்தபோதும் அதிமுக கட்சி கொடி போட்ட காரில்தான் சென்னை வந்தார். இதற்கும் அமைச்சர் சி.வி.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். “அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று சென்னையில் பேட்டி அளித்தார்.

தற்போதைய அமைச்சர்களில் சசிகலாவுக்கு எதிராக தைரியமாக பேட்டி அளிப்பது அமைச்சர் சி.வி.சண்முகம் மட்டும்தான். தென் மாவட்டத்தை சேர்ந்த ஒரு அமைச்சர் கூட சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியது பற்றி வாய் திறக்கவில்லை. டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்தபோது அமைச்சர் ஜெயக்குமாரை தான் மற்ற அமைச்சர்கள் பேட்டி கொடுக்க வற்புறுத்தினார்கள். ஆனால், நான் பேட்டி கொடுக்கவில்லை என்று ஒதுங்கி விட்டார். பின்னர் சி.வி.சண்முகம் தைரியமாக பேட்டி அளித்தார். ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார். அப்போது எடப்பாடியும் சசிகலா பற்றி எதுவும் பேசவில்லை. தற்போது அதிமுக தலைமை பதவியில் இருப்பதால், சசிகலாவுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது என்ற அர்த்தத்தில் அவரும் மவுனமாக இருக்கிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை.

இதனால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு மவுசு கூடியுள்ளது. இவர்தான் ஒன்மேன் ஆர்மியாகவும், வீரமான ஆண் மகனாகவும் இருந்து சசிகலாவை எச்சரிக்கை செய்யும் வகையில் பேட்டி அளிக்கிறார் என்று சமூக வலைதளங்களில் புகழ்ந்து தள்ளுகிறார்கள். இதுபோன்ற தொண்டர்களின் உற்சாகத்தால் சி.வி.சண்முகம் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இன்னும் வரும் நாட்களில் சசிகலாவை எதிர்த்து இதைவிட வேகமாக அமைச்சர் சி.வி.சண்முகம் பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags : CV Shanmugam ,volunteers ,Sasikala ,AIADMK , CV Shanmugam, AIADMK, Volunteers, Praise
× RELATED ‘பாஜ நடத்தியது ரோடு ஷோ அல்ல; இறுதி...