×

நாலா பக்கம்

சட்டி சுட்டதடா...புத்தி வந்ததடா

அசாமில் கடந்த சட்டப்பேரவை  தேர்தலில் காங்கிரஸ். மொத்தமுள்ள 126 தொகுதிகளில் 122 இடங்களில் தனியாக நின்றது.  ஆனால், வெறும் 26 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் சூடுபட்ட காரணத்தால், இம்முறை மிகவும் ஜாக்கிரதையாக காய்களை நகர்த்தி வருகிறது காங்கிரஸ். மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சி செய்து வரும் பாஜ.வுக்கு எதிரான வாக்குகளை சிதற விட்டு விடக் கூடாது எனவும் கவனமுடன் உள்ளது.

இதனால்,  அசாமில் இருக்கும் பெரும்பாலான சின்னச் சின்ன கட்சிகளைக் கூட  கூட்டணியில் இணைத்துக் கொண்டு மெகா கூட்டணி அமைத்துள்ளது். முதல்வர்  வேட்பாளரை அறிவிப்பது கூட கூட்டணி கட்சியினரிடம் அதிருப்தியை  சம்பாதிக்கலாம் என்ற கவலையால், தேர்தல் முடிவுக்கு பிறகே முதல்வர் தேர்வு  என்றும் கூறியுள்ளது. காங்கிரசின் இந்த சாதுரியங்கள், எந்த அளவுக்கு கைகொடுக்குமோ தெரியவில்லை. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.

கிளறி விட்ட காங்கிரஸ் கடுப்பில் கம்யூனிஸ்ட்

கேரளாவில் கடந்த முறை பறிகொடுத்த ஆட்சியை இம்முறை பிடித்து விட வேண்டும் என்ற வேகத்தில் உள்ள காங்கிரஸ், ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி  விட்டது. இந்நிலையில், பல்வேறு அரசுத் துறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிக ஊழியர்களாக பணிபுரிந்து வந்தவர்கள், கண்ணும் காதும் வைத்தப்படி ரகசியமாக நிரந்தரமாக்கப்பட்டு  வருகின்றனர். இதுவரை 3 லட்சம் பேர் இவ்வாறு நியமிக்கப்பட்டு இருப்பதாக காங்கிரசை சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

இதை கேள்விப்பட்டதும், கேரளா முழுவதும் அரசுத் தேர்வு எழுதி ரேங்க்  பட்டியலில் இடம்பிடித்து பல ஆண்டுகளாக வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள்  போராட்டத்தில் குதித்துள்ளனர். தற்காலிக ஊழியர்களுக்கு மட்டுமின்றி, கம்யூனிஸ்ட் கட்சிகளின் சில முக்கிய பிரமுகர்களி–்ன் குடும்பத்தினர், மனைவிகளுக்கும் கூட இந்த வேலை வழங்கப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் கிளப்பி விட்டுள்ளது. வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் இடையே இது கொந்தளிப்பை ஏற்படுத்தி இருப்பதால், ஆளும் இடது முன்னணி பயங்கர கடுகடுப்பில் இருக்கிறது.

இவரு கூட அவரா இருப்பாரோ?

‘ஆபரேஷன் தாமரை’ என்ற வார்த்தை மிகவும் பிரபலம். எதிர்க்கட்சித் தலைவர்கள், எம்எல்ஏ.க்கள். எம்பி.க்களை தனது கட்சிக்குள் வளைத்து போடும் பாஜ.வின் அதிரடி திட்டம்தான், இந்த பெயரில் அழைக்கப்படுகிறது. கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் ஆட்சிகளை இது கவிழ்த்துள்ளது. இந்த பெயர் மிகவும் பிரபலமாகி விட்டதால், பாஜ.வின் பெயருக்கும் நிரந்தர அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பெயர் இல்லாமலேயே மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறது பாஜ. அக்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், எம்பி.க்கள், மூத்த தலைவர்கள், எம்எல்ஏ.க்கள் தினமும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி கட்சியில் இருந்து விலகி, மம்தாவை பலவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

நேற்றும் கூட, கட்சியின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏ.வுமான பரத்மான் தக்கின் ரவிரஞ்சன் சக்ரவர்த்தி, உடல்நிலையை காரணம் காட்டி நாசுக்காக கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். பாஜ.வின் சூத்திரதாரிகளில் ஒருவரான அமித்ஷா, முன்னிலையில் இவரும் அக்கட்சியில் ஐக்கியமாகி விடுவார் என்று பரவலாக பேசப்படுகிறது.

சுவர்களை தேடி அலையும் கட்சிகள்

புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையில் மதச்சார்பற்ற அணிகள் ஓரணியாக தேர்தலை  சந்திக்க தயாராகி வருகின்றன. இதேபோல், என்ஆர் காங்கிரஸ், பாஜ, அதிமுக ஒரே  அணியாக போட்டியிடுவது பற்றி ஆலோசித்து வருகின்றன. கூட்டணி முடிவு  செய்யப்படாததால், கட்சிகள் தேர்தல் பணி மந்தமாகவே உள்ளது. இப்போதைக்கு தெருமுனை பிரசாரம், சுவரொட்டி ஒட்டுதல்,  சமூக வலைதளங்கள் வாயிலாக ஆதரவு திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. அதோடு, சுவர் விளம்பரம் எழுதுவதில் இப்போதுதான் ஆர்வம் காட்டி தொடங்கி உள்ளன.

தனக்கு தான் சீட் கிடைக்கும் என உறுதியாக நம்பும் வேட்பாளர்கள், இப்போதே இதற்கான இடங்களை போட்டிப் போட்டு பிடித்து, தேர்தல் விளம்பரங்களை எழுதி வருகின்றனர். தேர்தல் தேதி அறிவித்து கூட்டணி உறுதியான பிறகுதான், தலைவர்கள் பிரசாரம் சூடுபிடிக்கும் என்று தெரிகிறது. அதுவரையில், இப்படிதான் சுவர் பிடிக்கும் போட்டி நடந்து கொண்டிருக்கும் என்கின்றனர் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள்.

Tags : Assembly Election, Tamil Nadu
× RELATED சொல்லிட்டாங்க…