×

திருப்பம் தந்த திருவண்ணாமலை இடைத்தேர்தல்

பொதுவாக இடைத் தேர்தல்கள் ஆளுங்கட்சிக்கு  மதிப்பெண் போடும் தேர்தலாகவே இருக்கும். ஆனால் 1991ம் ஆண்டுக்கு பிறகு இடைத் தேர்தல் என்றாலே, அது  ஆளுங்கட்சிக்குதான் வெற்றி என்றாகி விட்டது.  ஆனால் அதற்கு முன்பு இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சியின் கெடுபிடிகள் இருக்காது. ஆளுங்கட்சியினர் பிரசாரம், வாக்குறுதிகள் மூலம் வாக்காளர்களை கவர பார்ப்பார்கள். கூடவே பண்ணையார்கள், பெரும் பணக்காரர்கள் செல்வாக்குகள் இடைத்தேர்தலில பெரும் எண்ணிக்கையில் வாக்குகளாக மாறும். அப்படிப்பட்ட கால கட்டத்தில்தான் திருவண்ணாமலை இடைத் தேர்தல் வந்தது.  திருவண்ணாமலை அப்போது வட ஆற்காடு மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஒன்று. அங்கு 1962ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்  பி.பழனி பிள்ளை 35,148 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் ப.உ.சண்முகம் 33, 999 வாக்குகள் பெற்று 2வது இடம் பிடித்தார்.

பழனிபிள்ளை  முதுமை காரணமாக 1963ம் ஆண்டு காலமானார். அதனால் அதே ஆண்டு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக 1962 சட்டப்பேரவை தேர்தலில் வென்று பேரவையில் எதிர்கட்சியாக மாறி இருந்தது. கூடவே திருவண்ணாமலையிலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றியை இழந்திருந்தது. அதனால்  முதல்வர் காமராசர், அவரது அமைச்சரவை சகாக்களுடன் 10 நாட்களுக்கு மேல் திருவண்ணாமலையில் முகாமிட்டு பிரசாரம் செய்தார். கூடவே தேர்தலுக்கு முந்தையநாள் திருவண்ணாமலையில் 48 லட்சம் செலவில் குடிநீர்த் திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.

ஆனால் திமுகாவின் பிரசாரம் வேறு மாதிரி இருந்து.  தமிழர்கள் பூர்வீகமாக வாழும் சித்தூர், சந்திரகிரி, திருப்பதி, ரேணிகுண்டா, பலமநேரி, குப்பம் உட்பட வட ஆற்காடு மாவட்டத்தின் பழைய பகுதிளை ஆந்திராவுக்கு தாரை வார்த்து விட்டனர். அதனால்  காங்கிரஸ் மீது வட ஆற்காடு மக்கள் கடும் கோபத்தில் இருந்தனர். போதாதற்கு காமராசர், ‘குளமாவது.... மேடாவது... எல்லாம் இந்தியாவில் தானே இருக்குங்கறேன்’ என்று  சொல்லிவிட்டார். வட ஆற்காடு மக்களை போல மதுரை மாவட்டத்தினர் தேவி குளம், பீர்மேடு பகுதிகளை இழந்திருந்தனர். பீர்மேடு தமிழகத்துடன் இணைக்கப்பட்டு இருந்தால் முல்லைப் பெரியாறு பிரச்னை எழுந்திருக்காது. அதனால்  வட ஆற்காடு மக்கள் முக்கிய பிரச்னையாக கருதிய தமிழக பகுதிகள் இழப்பை முக்கியமாக கொண்டு திமுகவினர் பிரசாரம் செய்தனர். அதற்கு ஏற்ப இடைத் தேர்தல் முடிவுகள் காமராசருக்கு அதிர்ச்சியை தந்தது. திமுக வேட்பாளர் ப.உ.சண்முகம் 38,666 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் அண்ணாமலை என்கிற பத்ராசலம் 37,191 வாக்குகள் பெற்றார். வாக்கு வித்தியாசம் 1475.

திருவண்ணாமலை இடைத் தேர்தல் முடிவுதான் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் ஆட்சி பொறுப்பில் இருந்து விலகி  கட்சி வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும் என்ற காமராசரின் ‘கே பிளான்’ என்கிற ‘காமராசர் திட்டம்’  நாடு முழுவதும் அமலுக்கு வர காரணமாகவும் இருந்தது. திருவண்ணாமலை இடைத் தேர்தல்  வெற்றி 1967ம் ஆண்டு நடந்த பேரவை ெபாதுத் தேர்தலிலும் எதிரொலிக்க திமுக  முதல் முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது.

Tags : Thiruvannamalai , Thiruvannamalai, by-election
× RELATED 1300 மெட்ரிக் டன் உரம் கொள்முதல் * ரயில்...