×

தூங்காநகர தொகுதியில் தூங்கி வழிஞ்ச எம்.எல்.ஏ: மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ்.எஸ்.சரவணன்

மதுரை மாநகரில் அதிகளவில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளை கொண்டதாக மதுரை தெற்கு தொகுதி இருக்கிறது. இங்கு 2016ல் அதிமுக சார்பில் எஸ்.எஸ்.சரவணன் வெற்றி பெற்றார். பிரசாரத்தின்போது இவர் கொடுத்த வாக்குறுதிகளை தொகுதி முழுக்க நீட்டி முழக்கலாம். ஆனால், எதையுமே நிறைவேற்றாததுதான் கொடுமை. இத்தொகுதியில் முக்குலத்தோர், சவுராஷ்டிரா சமூக மக்கள் அதிகளவில் உள்ளனர். இங்கு புகழ் பெற்ற திருமலை நாயக்கர் மகால் அமைந்துள்ளது. நெசவுத்தொழில், அது சார்ந்த வணிகம் அதிகம் உள்ளன. மதுரை தெப்பக்குளத்தில் இருந்து டி.எம்.கோர்ட் வரையிலான ஒரு ரோடும், அதேபோல், முனிச்சாலை சிமென்ட் ரோடு, பழைய குயவர்பாளையம், பந்தடி, தெற்கு மாடவீதி வரையிலான முக்கிய பகுதிகளைக் கொண்டிருக்கிறது.

புழுதி பறக்கும் பாரு...: தொகுதியின் பகுதிகள் பழைய மதுரை நகராக இருப்பதால், எவ்வித வளர்ச்சியும் அடையவில்லை. குடிநீர், சாலை, பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் வழக்கம் போல் தொடர்கின்றன. தொகுதிக்குள் உள்ள காமராசர் சாலை, முனிச்சாலை, பழைய குயவர்பாளையம் ரோடு, தெற்குமாசி வீதி, தெற்குவாசல், மஞ்சணக்காரத்தெரு ஆகிய பகுதிகள் எப்போதும் தூசிபறக்கும் பகுதியாக உள்ளன. இப்பகுதியினர்  சுவாசக் கோளாறுகளால் திண்டாடுவது தொடர்கிறது. தாகத்தில் மக்கள் தவிப்பு: மதுரை கீழவாசல் பகுதியில் நெரிசல்  தீர்க்க பாலம் அமைப்பேன் என்றார். செய்யவில்லை. லட்சுமிபுரம், பாலரெங்காபுரம், காமராஜர்புரம்,  மகால் பந்தடி, தெற்கு மாட வீதி பகுதிகளில் குடிநீர் பிரச்னையை நிரந்தரமாகத்  தீர்ப்பேன் என்றார். தீர்க்கவில்லை. தொகுதி முழுவதும் பாதாளச்சாக்கடை சீராக செல்ல ஏற்பாடு  செய்வேன் என்றார். பல இடங்களில் கழிவுநீர் தேங்கியுள்ளது.

அமைச்சரின் கைத்தடி...?: அமைச்சர் உதயகுமாரின் தீவிர ஆதரவாளரான இவர், ஜெயலலிதா பேரவையின் மாநகர மாவட்ட செயலாளராகவும் இருப்பதால், மீண்டும் சீட்  கிடைக்கும் நம்பிக்கையில் இருக்கிறார். ஆனாலும், தொகுதிக்குள் மக்களிடம் கடும் அதிருப்தி நிலவுகிறது. இத்தொகுதி நெசவாளர்கள் நிறைந்த பகுதி. நெசவாளர்களுக்கான கைத்தறி நூலை குறைந்த விலைக்கு வாங்கி  வழங்குவேன் என்றார். நெசவாளர்கள் நூலாக தேய்ந்து போனதுதான் மிச்சம். ‘‘தொகுதிக்கு என்று அவர் எதையுமே செய்யவில்லை. அணி தாவுவதாக கூறி அடிக்கடி மேலிடத்துக்கு ‘அமைதி எச்சரிக்கை’ விடுத்து தன்னை வளர்த்துக் கொண்டாரே தவிர, ஒரு துரும்பையும் எம்எல்ஏ எங்களுக்காக கிள்ளிப்போடலை. தூங்கா நகரத்துல தூங்கி வழிஞ்ச எம்எல்ஏ இவர்தாங்க...’’ என்கின்றனர் மதுரை தெற்கு தொகுதி மக்கள்.

Tags : MLA ,constituency ,AIADMK ,SS Saravanan ,Madurai South , AIADMK, thoonganagaram constituency
× RELATED பல்லடம் வாக்குச்சாவடியில் திமுக எம்எல்ஏ தர்ணா