×

மாநிலத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் வழக்கம் போல் இயங்க அரசு அனுமதி

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் வழக்கம் போல், இயங்க மாநில அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டதுடன் ரதவுற்சவம், திருவிழா, மாநாடு, கருத்தரங்கம் உள்ளிட்டவை நடத்த தடை விதிக்கப்பட்டது. 5 மாதங்களுக்கு பின் கோவிட்-19 விதிமுறைகள் படி பக்தர்கள் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. கோயிலில் ேஹாமம், யாகம் நடத்துவது, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தவும் அனுமதிக்கவில்லை.  இந்நிலையில் மாநிலத்தில் பிப்ரவரி தொடங்கி மே மாதம் வரை ஆயிரக்கணக்கான கோயில்களில் தேரோட்டம், பிரம்மோற்சவம் நடத்துவது வழக்கம்.

அதன்படி இவ்வாண்டு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்த நிலையில் மாநில அரசின் சார்பில் அனுமதி வழங்காமல் இருந்ததால், பல புராண காலத்தில் கட்டப்பட்ட கோயில்களில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தேர், திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டது. குறிப்பாக சவதத்தி ரேணுகா எல்லம்மா ேகாயில், சித்தராமரோடா கோயில், கண்டேஷ்வரசுவாமி கோயில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மாநில இந்து சமய அறநிலைய துறை ஆணையர் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்தில் மாநிலத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. கோயில்களில் சில மாதங்களுக்கு பின் சாமி தரிசனம், வழிபாடு நடத்த மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட பக்தர்கள் வழக்கம் போல் வழிபாட்டு தலங்கள் இயங்க அனுதிக்கும்படி கோரிக்கை வைத்தனர்.

பக்தர்களின் கோரிக்கையை செயல்படுத்தும் வகையில் இனி அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் எந்த விதமான கட்டுப்பாடும் இல்லாமல் வழக்கம் போல் இயங்க அனுமதிக்கப்படும். கோயில்களில் ஹோமம், யாகம் நடத்துவது, பிரசாதம், அன்னதானம் வழங்க அனுமதி வழங்கப்படுகிறது. தேர் திருவிழாக்கள், உற்சவங்கள் உள்ளிட்ட வழிபாடுகளும் நடத்தலாம். கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதால், பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மாஸ்க் அணிவது உள்ளிட்ட கோவிட்-19 விதிமுறை பின்பற்றுவது நல்லது என்று தெரிவித்துள்ளார். மாநில அரசின் இந்த உத்தரவு அனைத்து மத பக்தர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Tags : government ,places ,state , The government has allowed all places of worship in the state to function as usual
× RELATED வறட்சி நிவாரணம் வழங்க ஒன்றிய அரசுக்கு...