பெண்களை கேலி செய்ததை தட்டிக்கேட்ட பஸ் டிரைவர் மீது தாக்குதல்: 8 பேருக்கு வலை

அண்ணாநகர்: அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியை சேர்ந்தவர் செல்வம்(35). மாநகர பேருந்து ஓட்டுனர். நேற்று முன்தினம் இரவு பாரிமுனையிலிருந்து கோயம்பேடுக்கு (தடம் எண் 15) என்ற பேருந்தை ஓட்டிச்சென்றார். அமைந்தகரை கண்ணையா தெரு பஸ் ஸ்டாப் அருகே பேருந்து வந்தபோது 8 பேர் கொண்ட கும்பல் பேருந்தில் ஏறி படிக்கட்டில் நின்று கொண்டு சாலையில் நடந்து செல்லும் பெண்களை கேலி கிண்டல் செய்தது. இதை பார்த்த ஓட்டுனர் செல்வம் படிக்கட்டில் தொங்கிய படி வந்தவர்களை உள்ளே வருமாறு கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் செல்வத்தை சரமாரியாக வாய், மூக்கு, வயிறு உள்ளிட்ட பகுதியில் தாக்கியது. வலி தாங்க முடியாமல் செல்வம் அலறினார். இதை பார்த்த நடத்துனர் அவர்களை தடுத்தபோது அவரையும் தாக்கி விட்டு தப்பியது. இந்நிலையில், ரத்த காயத்துடன் செல்வம் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்தை நிறுத்தி விட்டு அமைந்தகரை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து தப்பி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories:

>