×

ஆலந்தூர் தொகுதி பிரச்னைகளுக்காக மத்திய அமைச்சருடன் திமுக எம்பி டி.ஆர்.பாலு சந்திப்பு: மக்கள் வாழ மாற்று இடம் வழங்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்: பரங்கிமலை கன்டோன்மென்ட் பகுதி மக்கள் வாழ மாற்று இடம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, எம்பி டி.ஆர்.பாலு தலைமையில் திமுகவினர், மத்திய அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்தூர் தொகுதியில் ராணுவத் துறை சம்பந்தமான சில பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தி டெல்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, திமுக நாடாளுமன்ற குழுத்  தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்பியுமான டி.ஆர்.பாலு தலைமையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன், எம்பி செல்வம் ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது. அனகாபுத்தூர் - தரப்பாக்கம் இடையே அடையாற்றின் குறுக்கே ராணுவத் துறையின் ஆட்சேபணை காரணமாக 8 ஆண்டுகளாக தடைபட்டு இருந்த மேம்பாலப் பணிகளை மீண்டும் துவங்குவதற்கு நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் ஆலந்தூர் தொகுதி 157வது வட்டம், மணப்பாக்கத்தில் உள்ள  சுடுகாட்டுக்கு சுற்றுச்சுவர் அமைக்க ராணுவத் துறை அனுமதி வழங்க வேண்டும். பரங்கிமலை கன்டோன்மென்ட், துளசிங்கபுரம் பேட்டரிக் லேனில் பட்டா நிலத்தில் 15 குடும்பங்கள் வசிக்கும் பகுதி, ராணுவத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அதனால். ஒவ்வொரு முறையும் அவர்களது வசிப்பிடத்திற்கு செல்ல ராணுவத் துறையின் அனுமதியை நாடவேண்டியுள்ளது. எனவே, அவர்களுக்கு நிரந்தர வழி அல்லது அப்பகுதி மக்கள் வாழ மாற்று இடம் வழங்க வேண்டும். கன்டோன்மென்ட் நகரில் ராணுவத் துறைக்கு சொந்தமான இடங்களில் 40 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 40 ஆயிரம் பொதுமக்கள் வாழும் வசிப்பிடத்தை, ராணுவத் துறை அடிக்கடி காலி செய்ய வலியுறுத்தியும், மக்களின் ஓலைக்குடிசைகளை மாற்றவும் அனுமதிக்காமல் துன்புறுத்துகிறது. அவர்களுக்கு  நிரந்தர தீர்வு அல்லது மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : Palu ,DMK ,Union Minister ,Alandur , DMK MP DR Palu meets Union Minister for Alandur constituency issues: urging people to provide alternative living space
× RELATED சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய...