நெரும்பூர் துணை மின் நிலையத்தில் இடிந்து விழும் நிலையில் அலுவலக கட்டிடம்: அச்சத்துடன் வந்து செல்லும் ஊழியர்கள்

திருக்கழுக்குன்றம்: நெரும்பூர் கிராமத்தில் உள்ள துணை மின் நிலைய கட்டிடம் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், தினமும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். இதனை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என வலியுறுத்துகின்றனர். திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான துணை மின் நிலையம் உள்ளது. இங்கு அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட சுமார் 15க்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர். இந்த மின் நிலையத்தின் கட்டிடம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதனால், கட்டிடத்தின் பல பகுதிகள் விரிசல் ஏற்பட்டு, சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து காணப்படுகிறது. அடிக்கடி கட்டிடத்தின் சில பகுதி இடிந்து விழுவதால் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அச்சத்துடனே பணிபுரிகின்றனர்.

மழைக்காலங்களில் கட்டிடத்தின் மேல் தளத்தில் இருந்து மழைநீர் ஒழுகுவதால், அங்கு பாதுகாக்கப்படும் முக்கிய ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள் தண்ணீரில் நனைந்து நாசமாகி விடுவதால், அதிகாரிகள் கடும் அவதியடைகின்றனர். மேலும், அலுவலக வளாகத்தை சுற்றி சுற்றுச்சுவர் இல்லாததாலும், முட்புதர்கள் மண்டி கிடப்பதாலும் பாம்பு, தேள், பூரான் உள்பட பல்வேறு விஷ பூச்சிக்கள் அலுவலகத்தில் அடிக்கடி புகுந்து விடுகின்றன. இதையொட்டி, ஊழியர்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.

இந்த பழமையான, பாழடைந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு, புதிய அலுவலக கட்டிடம் கட்டித் தர வேண்டுமென பலமுறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தும், இதுவரை எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. எனவே, ஆபத்தான நிலையில் உள்ள பழமையான மின்வாரிய அலுவலக கட்டிடத்தை முற்றிலுமாக அகற்றிவிட்டு நவீன வசதிகளுடன் கூடிய புதிய அலுவலக கட்டிடத்தை கட்டி கொடுக்க வேண்டும் என மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>