×

எஸ்ஐ தேர்வில் ஆரம்பத்தில் இருந்தே தமிழ் வழி ஒதுக்கீட்டை பின்பற்றவேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ராமேஸ்வரத்தைச் சேர்ந்த விக்னேஷ்வரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘எஸ்ஐ பணிக்காக கடந்தாண்டு ஜன.12ல் நடந்த எழுத்துத்தேர்வில் பங்கேற்றேன். உடல் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றும், பொதுப்பிரிவினருக்கான உத்தேச பட்டியலில் என் பெயர் இல்லை. பள்ளிப்படிப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில்தான் முடித்துள்ளேன். இதற்கான இட ஒதுக்கீடு வழங்கியிருந்தால் எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். தமிழ்வழி படிப்பிற்காக இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றவில்லை. எனவே, தமிழ் வழி ஒதுக்கீடு முறையை பின்பற்றி முறைப்படி தேர்வு செய்யவும், உத்தேச பட்டியலுக்கு தடையும் விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மூத்த வக்கீல் அஜ்மல்கான் ஆஜராகி, ‘‘தமிழ்வழி இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படாததால் பலரது வாய்ப்பு பறிபோகிறது. இட ஒதுக்கீடு கொண்டு வந்த நோக்கமே வீணாகிறது’’ என்றார். அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயணன் ஆஜராகி, ‘‘இனிவரும் காலங்களில் டிஎன்பிஎஸ்சி மற்றும் டிஆர்பி ஆகியவற்றைப் போல எஸ்ஐ தேர்விலும் தமிழ் வழி ஒதுக்கீடு முறை பின்பற்றப்படும். தற்போது நேர்முகத்தேர்வு இறுதி கட்டத்தில் உள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘மனுதாரர்கள் ஏற்கனவே பெற்ற கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் அவர்களுக்கு தமிழ்வழி இட ஒதுக்கீட்டின் படி பணி வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் டிஎன்பிஎஸ்சி மற்றும் டிஆர்பியைப் போல எஸ்ஐ தேர்விலும் ஆரம்பத்தில் இருந்தே இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும்’’ என உத்தரவிட்டு மனுக்களை முடித்து வைத்தனர்.

Tags : Tamil ,ICC ,Government of Tamil Nadu , The Tamil way quota should be followed from the very beginning in the SI examination: ICC branch order to the Government of Tamil Nadu
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...