×

கோவையில் தீண்டாமை கொடுமை தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர் ஓட்டலில் அடித்துக் கொலை: 3 பேர் கைது

சூலூர்: சூலூர் அருகே, தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த கூலிதொழிலாளி, கூடுதல் குருமா கேட்டதற்காக  அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள முத்துக்கவுண்டன் புதூர் பட்டத்தரசி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (37). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி இரு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு  சூலூர் ரயில் நிலையம் எதிரேயுள்ள ஓட்டலில் புரோட்டோ வாங்கிய ஆரோக்கியராஜ், கூடுதலாக ஒரு பாக்கெட் குருமா வேண்டும் என கேட்டுள்ளார்.

அப்போது உரிமையாளர் கரிகாலன், அவரது நண்பர் முத்துபாண்டியன், புரோட்டோ மாஸ்டர் கருப்புசாமி ஆகியோர், ‘‘குருமா அளவாகத்தான் தரமுடியும். கூடுதலாக தரமுடியாது’’ எனக் கூறியதோடு, தகாத வார்த்தைகள் பேசி உள்ளனர். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே, கரிகாலன், கருப்புசாமி, முத்துப்பாண்டியன் ஆகியோர் சேர்ந்து ஆரோக்கியராஜை தாக்கி கீழே தள்ளினர். இதில், அவர் மயங்கினர். இதன்பின், அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின்பேரில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர்கள் வந்து பரிசோதித்து பார்த்தனர். அப்போது, அவர் இறந்து விட்டது தெரியவந்தது.

  இதையடுத்து, உறவினர்களும் அப்பகுதி மக்களும் திரண்டு வந்து கடையை சூறையாடியதோடு முத்துபாண்டியனை தாக்கினர். இதைத்தொடர்ந்து, சூலூர் போலீசார் விரைந்து சென்று கருப்புசாமி, கரிகாலன் ஆகியோரை பிடித்தனர்.  காயமடைந்த முத்துபாண்டியனை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், ஆரோக்கியராஜின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆரோக்கியராஜின் மனைவி தனலட்சுமி அளித்த புகாரின்பேரில் கருப்புசாமி, கரிகாலன் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதனிடையே, மாலையில் சடலத்தை போலீசார் ஒப்படைக்க வந்தனர். அப்போது, உடலை வாங்க மறுத்த தனலட்சுமி, ‘‘தாங்கள் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால் எங்களை சாதி பெயரை சொல்லி திட்டியதுடன் அவரை அடித்து கீழே தள்ளி உயிரிழக்க 3 பேர் காரணமாக இருந்தனர். எனவ 3 பேர் மீதும் வன்கொடுமை பிரிவின் வழக்கு பதிவு செய்யவேண்டும். அதுவரை உடலை வாங்கமாட்டோம்’’ என்று போலீசாரிடம் கூறி கதறினார். இதன்பின், கொலை மற்றும் வன்கொடுமை பிரிவின்கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் கருப்புசாமி, கரிகாலன், முத்துபாண்டி ஆகியோரை கைது செய்தனர்.

Tags : Coimbatore ,death ,hotel , Coimbatore: 3 arrested for beating hotel to death
× RELATED பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்...