×

ஆஸி. ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் செரீனா: ஜோகோவிச் முன்னேற்றம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) தகுதி பெற்றுள்ளார். இரண்டாவது சுற்றில் செர்பியாவின் நினா ஸ்டோஜனோவிச்சுடன் நேற்று மோதிய செரீனா 6-3, 6-0 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி, 9 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு 2வது சுற்றில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப் 4-6, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலிய வீராங்கனை அஜ்லா டாம்ஜனோவிச்சை 2 மணி, 34 நிமிடம் போராடி வென்றார்.

முன்னணி வீராங் கனைகள் நவோமி ஒசாகா (ஜப்பான்), அரினா சபலென்கா (பெலாரஸ்), சொரானா சிர்ஸ்டீ (ருமேனியா), கார்பினி முகுருசா (ஸ்பெயின்) ஆகியோரும் 3வது சுற்றுக்கு முன்னேறினர். அமெரிக்க நட்சத்திரம் வீனஸ் வில்லியம்ஸ் தனது 2வது சுற்றில் 1-6, 0-6 என்ற நேர் செட்களில் இத்தாலியின் சாரா எர்ரானியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் களமிறங்கிய நடப்பு சாம்பியன் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-7 (3-7), 7-6 (7-2), 6-3 என்ற செட் கணக்கில் மூன்றரை மணி நேரம் போராடி அமெரிக்காவின் பிரான்சிஸ் டியபோவை வீழ்த்தினார்.

சுவிஸ் நட்சத்திரம் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்கா 5-7, 1-6, 6-4, 6-2, 6-7 (9-11) என 5 செட்களில் ஹங்கேரியின் மார்டன் புக்சோவிக்சிடம் 4 மணி நேரம் போராடித் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். மற்றொரு 2வது சுற்றில் களமிறங்கிய உள்ளூர் நட்சத்திரம் நிக் கிர்ஜியோஸ் 5-7, 6-4, 3-6, 7-6 (7-2), 6-4 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் யுகோ ஹம்பர்ட்டை வீழ்த்தினார். விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 3 மணி, 25 நிமிடத்துக்கு நீடித்தது. போபண்ணா ஏமாற்றம்: ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் ஜப்பான் வீரர் பென் மெக்லக்லாபுடன் இணைந்து களமிறங்கிய இந்திய நட்சத்திரம் ரோகன் போபண்ணா 4-6, 6-7 (0-7) என்ற நேர் செட்களில் தென் கொரியாவின் ஜி சுங் நாம் - மின் கியூ சாங் ஜோடியிடம் தோற்று வெளியேறினார்.


Tags : Aussie ,round ,Serena ,Open Tennis: Djokovic , Aussie. Serena in the 3rd round of the Open Tennis: Djokovic progress
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...