ஆளுநர் கிரண்பேடியை மாற்றக் கோரி புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஜனாதிபதியிடம் மனு

புதுடெல்லி: ‘ஆளுநர் கிரண்பேடியை திரும்பப்பெற்றால் தான் புதுவை மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்,’ என இம்மாநில முதல்வர் நாராயணசாமி, ஜனாதிபதியிடம் நேரில் மனு கொடுத்துள்ளார். யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் தனக்குத்தான் அதிகாரம் என ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது. அரசின் அன்றாட நிர்வாக செயல்பாடுகளில் ஆளுநர் தலையிடுவதாகவும், நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதாகவும் நாராயணசாமி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். அவரை மாற்ற வலியுறுத்தி அவர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், டெல்லி சென்ற நாராயணசாமி நேற்று காலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து கிரண்பேடிக்கு எதிராக மனு கொடுத்தார். பின்னர், நாராயணசாமி அளித்த பேட்டி: புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அனைத்து திட்டங்களுக்கும் எதிராக ஆளுநர் கிரண்பேடி செயல்பட்டு வருகிறார். குறிப்பாக, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் 10 சதவீதம் உள்இடஒதுக்கீடு, புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் மருத்து கல்லூரிகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் போன்ற திட்டங்களுக்கு தற்போது வரை ஒப்புதல் வழங்காமல் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து காலதாமதம் செய்து வருகிறார். தன்னிச்சையாக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கிறார்.

அதற்கான அதிகாரம் அவருக்கு கிடையாது. 21 கட்சிகள் ஒன்றிணைந்து ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக 10 நாட்கள் தொடர்ந்து புதுவையில் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. அதே போன்று இது குறித்து ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்தும் வாங்கப்பட்டுள்ளது. அதனையும் ஜனாதிபதியிடம் கொடுத்துள்ளோம். மக்களால் தேர்த்டுக்கப்பட்ட அரசு எடுக்கும் முடிவுகளில் தலையிடக் கூடாது என நீதிமன்றங்கள் உத்தரவிட்டும் அதை கிரண்பேடி மதிக்காமல் மீறி செயல்பட்டு வருகிறார். இவரால் புதுவை மாநில நலத் திட்ட வளச்சிகள் அனைத்தும் மக்களுக்கும் கிடைக்காமல் பாதிக்கப்படுகிறது. எனவே, சர்வாதிகாரி போல் செயல்படும் அவரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அப்போது தான் மாநில மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்று மனுவை ஜனாதிபதியிடம் மனு கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>