×

மத்திய அரசின் உத்தரவுகளை அமல்படுத்த மறுப்பு டிவிட்டருக்கு இந்தியாவில் தடையா? ‘கூ’ செயலியில் இணையும் மத்திய அமைச்சகங்கள்

புதுடெல்லி: விவசாயிகள் போராட்டம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டதாக 1,178 கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில், 500 கணக்குகளை மட்டுமே டிவிட்டர் நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. தொடர்ந்து அரசின் உத்தரவுகளை டிவிட்டர் மதிக்காத நிலையில், புதிய மைக்ரோபிளாகிங் செயலியான ‘கூ’-க்கு (koo) மத்திய அமைச்சகங்கள் மாறி வருகின்றன. இதனால், டிவிட்டருக்கு மத்திய அரசு தடை விதிக்க திட்டமிட்டிருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிவிட்டரில் பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அதோடு, இந்த விவகாரத்தில் சில சர்ச்சைக்குரிய பதிவுகளும் டிவிட்டரில் அதிகரித்துள்ளன.

போராட்டத்தில் விவசாயிகள் பலியாவதை இனப்படுகொலையுடன் ஒப்பிட்டு ஹேஷ்டேக் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, 257 டிவிட்டர் பதிவுகள் மற்றும் ஒரு ஹேஷ்டேக்கை நீக்கக் கோரி மத்திய அரசு டிவிட்டருக்கு உத்தரவிட்டது. ஆனால், இதில் சில பதிவுகள் நீக்கப்பட்டாலும், சில மணி நேரத்தில் தடையை டிவிட்டர் நீக்கியது. இது தொடர்பாக விளக்கம் கேட்ட மத்திய அரசு, சர்ச்சைக்குரிய கணக்குகள் மற்றும் பதிவுகளை நீக்காவிட்டால், அபராதம் மற்றும் சிறை தண்டனை என சட்ட நடவடிக்கையை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரித்தது.

இதைத் தொடர்ந்து, விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவதாக பாகிஸ்தான், காலிஸ்தான் ஆதரவு கொண்ட 1,178 கணக்குகளை நீக்க மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன் மீண்டும் உத்தரவிட்டது. இவ்வாறு கணக்குகளை முடக்குவது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என கூறி டிவிட்டர் நிர்வாகம், மத்திய அரசுடன் ஆலோசிக்க அனுமதி கேட்டது. இந்நிலையில், மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து 500 கணக்குகளை மட்டுமே இடைநீக்கம் செய்திருப்பதாக டிவிட்டர் நிர்வாகம் நேற்று அறிக்கை வெளியிட்டது.

அதில், ‘மத்திய அரசு கூறியதைத் தொடர்ந்து 500 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. டிவிட்டர் விதிமுறைப்படி, சட்ட விரோத பதிவுகள் குறித்து புகார் வந்தால், அது உள்நாட்டு சட்டப்படி மீறப்பட்டதா, டிவிட்டர் விதிமுறையையும் மீறியிருக்கிறதா என ஆராய்வோம். உள்நாட்டு சட்டத்தை மட்டும் மீறியதாக இருந்தால், அந்நாட்டில் மட்டும் முடக்கப்படும். அதுபோல, 500 கணக்குகள் இந்தியாவில் மட்டும் தடை செய்யப்பட்டுள்ளன. இதில், செய்தி ஊடக நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் கணக்குகள் எதுவும் நீக்கப்படவில்லை. அவ்வாறு செய்வது இந்திய சட்டத்தின் கீழ் சுதந்திரமாக கருத்து தெரிவிப்பதற்கான அடிப்படை உரிமையை மீறுவது என்று நாங்கள் நம்புகிறோம்,’ என கூறியுள்ளது.

அதே சமயம், எந்தெந்த கணக்குகள் முடக்கப்பட்டன என்ற விவரத்தையும் டிவிட்டர் நிர்வாகம் தரவில்லை. இவ்வாறு தொடர்ந்து டிவிட்டர், மத்திய அரசின் உத்தரவுகளை மதிக்காமல் இருப்பதால், டிவிட்டரை போன்றே உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள ‘கூ’ என்ற மைக்ரோபிளாகிங் செயலிக்கு மத்திய அரசு ஆதரவு அளித்து வருகிறது. இந்த செயலியில் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம், கப்பல் போக்குவரத்துத்துறை உட்பட பல அரசு அமைப்புகள் இணைந்துள்ளன.
டிவிட்டரின் பேச்சுவார்த்தை தொடர்பாக ‘கூ’ செயலியில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பதிலளித்துள்ளது.

அதில், ‘இந்த விவகாரத்தில் அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர், டிவிட்டர் நிர்வாகத்துடன் பேசவிருந்த சூழலில் டிவிட்டர் பொது வெளியில் பதிலை வெளியிட்டிருப்பது அசாதாரணமானது. விரைவில் எங்கள் முடிவை தெரியப்படுத்துவோம்,’ என கூறப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அமைச்சகங்கள் டிவிட்டருக்கு பதிலாக ‘கூ’ செயலியை பயன்படுத்த தொடங்கி உள்ளதாலும், அதற்கு எதிராக செயல்களில் இறங்கி இருப்பதாலும், இந்தியாவில் டிவிட்டருக்கு தடை விதிக்கப்படக் கூடும் என்ற சந்தேகத்தை சமூக வலைதளங்களில் பலர் கிளப்பி வருகின்றனர்.

பிரபலமாகும் ‘கூ’
* கூ செயலி, டிவிட்டர் போன்றே செயல்படும் மைக்ரோபிளாகிங் செயலியாகும்.
* இந்த செயலியை அப்ரமேயா ராதாகிருஷ்ணா மற்றும் மயாங் பிதாவ்கா இணைந்து உருவாக்கி இருக்கின்றனர்.
* இது கடந்த ஆண்டு மார்ச்சில் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர், ஆகஸ்டு 2020 மாதத்தில் இந்த செயலி, பிரதமரின் ஆத்ம நிர்பார் பாரத் போட்டியில் வெற்றி பெற்று 2ம் இடத்திற்கான பரிசை வென்றது.
*  இதுவரை ‘கூ’ செயலியை பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
* பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியர்கள் ‘கூ’ செயலியை பயன்படுத்த ஊக்குவித்தார்.
* தற்சமயம் ‘கூ’ செயலி தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் கிடைக்கிறது. விரைவில் மலையாளம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, பங்களா, ஒரியா மற்றும் அசாமிஸ் போன்ற மொழிகள் சேர்க்கப்பட இருக்கின்றன. 


Tags : India ,Federal Ministries , Is Twitter banned in India for refusing to implement federal orders? Federal Ministries joining the ‘Goo’ Processor
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!