×

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் பஸ் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணிக்கும் மாணவிகள்

நெல்லை: கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதையடுத்து மாணவ, மாணவிகள் நெருக்கடி இன்றி பயணிக்க கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 24ம்தேதி கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தொழில் நிறுவனங்கள், வர்த்தக மையங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.

பஸ், ரயில் போக்குவரத்தும் முடக்கப்பட்டன. கடந்த 10 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்தது. தற்போது கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதை தொடர்ந்து படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்பினர். இந்நிலையில் 10, 12ம் வகுப்புகள் திறக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து கடந்த 8ம்தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதன்காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு பஸ்களில் இலவச பஸ்பாஸ் மூலம் பயணிக்கும் மாணவ, மாணவிகள் வருகை தற்போது அதிகரித்து காணப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பழைய பஸ்பாசை வைத்து பயணிக்கவும் அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால் அரசு போக்குவரத்து கழகம் மூலம் மாணவ, மாணவிகள் பயணிக்க போதிய பஸ்கள் இயக்கப்படாத நிலை தொடர்கிறது. இதனால் நெல்லை, பாளை பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு பயணிக்கும் மாணவ, மாணவிகள் போதிய பஸ்கள் இல்லாத காரணத்தினால் படிகளில் தொங்கி கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. எனவே மாணவ, மாணவிகள் சிரமம் இன்றி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பயணிக்கும் வகையில் கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : schools ,colleges , Bus, students
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...