×

அத்வானி முதல் குலாம்நபி ஆசாத் வரை மோடி அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விடுவது ஏன்?: நெகிழ்ச்சிக்கு மத்தியில் விமர்சனங்களும் அதிகம்

புதுடெல்லி: பிரதமர் மோடி பொது இடங்களில் அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விடுவதை பலர் பாராட்டி நெகிழ்ச்சி அடைந்தாலும் கூட, சிலர் விமர்சனங்களும் செய்து வருகின்றனர். இன்றைய சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகும் இந்திய அரசியல் தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். அவரது தனிப்பட்ட வாழ்க்கை முறை குறித்து சில விமர்சனங்கள் செய்யப்பட்டாலும், அவரை பலரும் பாராட்டி வருகின்றனர். சில விஷயங்களில் மிகுந்த ஆர்வம் கொண்ட மோடி, வலுவான மன உறுதி மற்றும் கடினமான முடிவுகளை எடுப்பதில் தீவிரம் காட்டுவார்.

குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் தேசிய கவனத்தை ஈர்த்த மோடி, தனது தனிப்பட்ட அரசியல் வாழ்க்கையில் அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விடும் சம்பவங்களும் நடக்கின்றன. நேற்று மாநிலங்களவையில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் உட்பட நான்கு எம்பிக்களின் வழியனுப்பும் நிகழ்வில் மோடி பேசினார். குலாம்நபி ஆசாத்தை புகழ்ந்து பேசிய மோடி, ஒருகட்டத்தில் கண்கலங்கி உணர்ச்சிவசப்பட்டு பேசினார். இவரது பேச்சு, பல்வேறு கட்சிகளின் எம்பிக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடங்களில் மோடி உணர்ச்சிவசப்பட்டு பேசுவது, நேற்று நடந்த சம்பவம் முதன்முறையானது அல்ல; பல இடங்களில் இதுபோன்று உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கி உள்ளார். அதுவும் பிரதமராக பதவியேற்ற பின் பல்வேறு நிகழ்வுகளில் கண்ணீர் விட்டதுண்டு.

* 2014ல் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பலத்தை பெற்று ஆட்சியை பிடித்தது. தேர்தல் முடிவுகளுக்கு பின் நடந்த நாடாளுமன்ற பாஜக எம்பிக்கள் கூட்டத்தில், மோடி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றைய கூட்டத்தில் உரையாற்றிய கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மோடியை பலவாறு புகழ்ந்து பேசினார். இதைக் கேட்ட மோடி ஒருகட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘இந்தியா எனது தாயைப் போன்றது, பாஜகவும் எனது தாய்’ என்றார்.

* 2015 செப்டம்பர் 28ம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியா பேஸ்புக் அலுவலகத்தில் நடந்த வினாடி வினா நிகழ்ச்சியில், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுடன் பேசினார். பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அந்நிகழ்வில் பங்கேற்றார். மோடி தனது ஆரம்பகால வாழ்க்கையையும், பெற்றோர்களை பற்றியும் கூறும்போது உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.

* 2016 நவம்பர் 13ம் தேதி கோவாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, ‘பணமதிப்பிழப்பு (நவ. 8 - 2016) அறிவிக்கப்பட்டு ஐந்து நாட்களில் நாட்டு மக்களின் சிக்கன நடவடிக்கையையும் அவர்களின் நேர்மையும் பாராட்டுகிறேன்’ என்று உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார்.

* 2018 அக்டோபர் 21ம் தேதி டெல்லியில் நடந்த தியாகிகள் தினத்தில், தேசிய போலீஸ் நினைவிடத்தை திறந்து வைத்தார். அப்போது காவல்துறையின் தியாகங்களைப் பற்றி பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.

* 2020 மார்ச் 7ம் தேதி டெல்லியில்  ​ஜன ஆஷாதி தினத்தில் நடந்த வீடியோ கான்பரன்சிங்கின், பயனாளி தீபா ஷா என்பவருடன் பேசும்போது மோடி உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். டேராடூனை சேர்ந்த தீபா, ஜன ஆஷாதி திட்டத்தின் காரணமாக தனக்கு ஏற்பட்ட நோய் பாதிப்பில் இருந்து மீண்டார். அப்போது அந்த பெண், ‘என் வாழ்க்கையை பிரதமரின் பரிசு’ என்று வர்ணித்த போது, மோடி கண்கலங்கி அவரை பாராட்டினார்.

* 2021 ஜனவரி 16ம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணிக்கான இயக்கத்தை தொடங்கிவைத்த மோடி, கொரோனா காலத்தில் நாட்டு மக்கள் எதிர்கொண்ட சவால்கள், பாதிப்புகள், முன்களப் பணியாளர்கள், காவலர்களின் தியாகத்தைப் புகழ்ந்து பேசிய போது உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.

இவ்வாறாக பிரதமர் மோடி, பொது இடங்களில் பேசும் போது உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விடுகிறார். இதனை சிலர் பாராட்டி வந்தாலும் கூட சிலர் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Advani ,Modi ,Ghulam Nabi Azad Why , Why does Modi often get emotional and shed tears from Advani to Ghulam Nabi Azad ?: Criticism amidst flexibility
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...