ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு சொந்தமான தீவுகளில் கால் பதிக்கும் சீனா: மீனவர்கள் அச்சம்

கீழக்கரை: ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு சொந்தமான தீவுகளில் சீனா கால்பதிக்க துவங்கியுள்ளது. இதனால் மீனவர்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். இலங்கைக்கும், தமிழகத்திற்கும் இடையே உள்ளது நெடுந்தீவு, அனலைத் தீவு, நயினாத் தீவு. இந்த 3 தீவுகளில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை சீனாவை சேர்ந்த சினோசர்-இடெக்வின் (Sinosar-Etechwin) நிறுவனத்திற்கு இலங்கை அரசு வழங்கியுள்ளது.

12 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த திட்டத்தை சீனாவுக்கு இலங்கை அரசு வழங்கியுள்ளது. இதனால் இந்தியா கடல் எல்லையில் எதிர்காலத்தில் சீனாவால் அச்சுறுத்தல் ஏற்படலாம் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முக்கியமாக, இந்த தீவுகள் ராமநாதபுரம் மாவட்ட பகுதியில் இருந்து 48 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் ஹபீப் ரஹ்மான் கூறுகையில்,‘‘ தமிழகத்தின் அருகில் உள்ள தீவுகளில் இது போன்ற திட்டங்களை சீனா செயல்படுத்துவது வர்த்த ரீதியாக என கருதுவது மிகவும் ஆபத்தானது. ஏனென்றால் ரூ.87 கோடி திட்டத்தில் சீனா இங்கு வருவதற்கான வாய்ப்பில்லை. இதில் உள்நோக்கம் உள்ளது. எனவே மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டும்,’’என்றார்.

இது குறித்து கடல் தொழிலில் ஈடுபடும் சாஹுல் கூறுகையில்,‘‘ இலங்கை அரசு தமிழக மீனவர்களை அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். நமது கடல் எல்லை அருகே தீவுகளில் சீன நிறுவனங்கள் பல்வேறு திட்டங்கள் என்ற பெயரில் ‘நங்கூரமிடுவது’ மேலும் நம்முடைய மீனவர்களுக்கு தொந்தரவாகி விடும். எனவே மத்திய அரசு கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்,’’ என்றார்.

Related Stories:

>