×

சிவகங்கையில் போலீஸ் தாக்கியதால் உயிரிழப்பு : தமிழக அரசு ₹5 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை:சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா ஆவாரங்காடு கிராமத்தை சேர்ந்தவர் குமார் (எ) கொக்கிகுமார். இவர்  கடந்த 2013ம் ஆண்டு ஒரு வழக்கில் கைதான போது திடீரென்று இறந்து போனார். போலீசார் தாக்கியதில் தான் தனது மகன் இறந்து போனதாக கொக்கிகுமாரின் தந்தை பாண்டிமுத்து குற்றம் சாட்டினார். இந்நிலையில் இந்த வழக்கு மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது போலீசார் தரப்பில், கொக்கிகுமாரை கைது செய்ய முயன்ற போது அவர் அரிவாளால் தாக்க முயன்றார். பின்பு அவர் தப்பி ஓட முயன்ற போது ரயில்வே தண்டவாளத்தில் விழுந்து பலத்த காயம் அடைந்தார். இதற்கிடையே நெஞ்சுவலிப்பதாக கூறிய அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்த நிலையில் இறந்து போனார் என்று தெரிவிக்கப்பட்டது.  மேலும் போலீசார் தாக்கியதில் ஏற்பட்ட காயம் காரணமாக கொக்கிகுமார் இறந்து போனதாக மாநில மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு இயக்குனர் கூடுதல் டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்தார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் போலீஸ் விசாரணையின் போது நடந்த தாக்குதலில் போது தான் கொக்கிகுமார் இறந்திருப்பது தெரிகிறது. எனவே கொக்கிகுமார் தந்தை பாண்டிமுத்துக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். மேலும் இந்த தொகையை தாக்குதலில் ஈடுபட்ட அப்போதைய மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரையிடம் இருந்து ரூ.2 லட்சமும், திருப்பாச்சேத்தி சப்-இன்ஸ்பெக்டர் துரைசிங்கத்திடம் இருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், போலீஸ்காரர்கள் செல்லபாண்டி, சரவணன் ஆகியோரிடமும் இருந்து தலா ரூ.50 ஆயிரமும் தமிழக அரசு வசூலித்துக்கொள்ளலாம். அவர்கள் 5 பேர் மீதும் குற்ற நடவடிக்கையும் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.



Tags : Death ,police attack ,Human Rights Commission ,Sivagangai ,Tamil Nadu ,government , இழப்பீடு
× RELATED தூத்துக்குடி துப்பாக்கி சூடு...