‘உங்கள் அன்பினை வழிநெடுக பார்த்து மெய்சிலிர்த்துப் போனேன்’ :தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்த டிடிவி தினகரன்

சசிகலாவை வழிநெடுகிலும் காத்து நின்று பேராதரவுடன் வரவேற்ற தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மை தொண்டர்களும் கழக உடன்பிறப்புகளுக்கு.. இந்திய அரசியல் வரலாறு இதுவரை காணாத வரவேற்பை நம்முடைய தியாகத் தலைவி  சின்னம்மா அவர்களுக்கு வழங்கிய நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக ஊருக்கு போய் சேர்ந்த நிம்மதியோடும் மன நிறைவோடும் இந்த மடலை உங்களுக்கு எழுதுகிறேன்.

பிப்ரவரி 8-ஆம் தேதி முதலே பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் வந்து குவிந்த படியே இருக்கின்றன. வழிநெடுக தொடர்ந்து இவ்வளவு நேரம் ஓரிடத்தில் கூட உற்சாகம் குறையாத  உணர்வுபூர்வமான வரவேற்பை வரலாறு பார்த்ததில்லை. ஆளும் தரப்பிலிருந்து அத்தனை மூலைகளிலும் கொடுக்கப்பட்ட அழுத்தங்களையும் போடப்பட்ட தடைகளையும் மீறி இந்த வரலாற்று சாதனை  எவ்வாறு நிகழ்ந்தது? லட்சக்கணக்கானோர் திரண்டு ஒரு சிறு வன்முறை முறை கூட இல்லாமல் ராணுவ கட்டுப்பாட்டு இருந்ததெல்லாம் எப்படி சாத்தியம்? கூட்டம் கூட்டுவது தொண்டர்களை  தூண்டிவிட்டு வன்முறையை நிகழ்த்தி பொதுச் சொத்துக்களை சூறையாடி மக்களை அச்சுறுத்தி பலத்தை காண்பிக்க தான் என்று நினைக்கும் சில தலைவர்களுக்கு மத்தியில் நீங்கள் மட்டும் எப்படி இந்த  மாயாஜாலத்தை நிகழ்த்தினார்கள்?

என்றெல்லாம் மாற்று முகாம்களில் இருப்பவர்கள் ஊடகத்துறையினர் உயர் அதிகாரிகள் என பலரும் வியப்பில் விழிகள் விரிய கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அத்தனைக்கும் புரட்சித்தலைவி அம்மா  அவர்களின் உண்மை தொண்டர்களான நீங்கள்தான் காரணம் என்பதையும் இந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உங்களைத்தான் சேர வேண்டும் என்பதையும் அவர்களுக்கு பதிலாக கூறி வருகிறேன்.

ஆமாம்.. திருவிழாக்கோலம் பூண்டு நம் அன்னையை வரவேற்போம் என்ற என் அன்பு வேண்டுகோளை அட்சரம் பிசகாமல் மெய்ப்பித்து ‘வெறும் திருவிழா அல்ல தமிழகத்தின் பெருவிழா’ என்று நடத்திக்  காண்பித்தது அவர்கள் நீங்கள் தானே.. ஆறு ஏழு மணி நேரத்தில் பயணித்து வர வேண்டிய தூரத்தை கடப்பதற்கு ஒரு நாள் முழுக்க ஆகிவிடும் என்று யாருமே எதிர்பார்க்காத நிலையில் மணிக்கணக்கில்  காத்து இருந்த சோர்வு எந்த இடத்திலும் உங்கள் முகத்தில் கொஞ்சமும் இல்லையே..

அதிலும் பல நூறு கிலோ மீட்டர் பயணம் செய்து தமிழகத்தின் மூலை முடுக்கில் இருந்து எல்லாம் திரண்டு வந்து பழங்காலத்தில் படைகள் முதல் நாளிலிருந்து தங்கி டீக்கடைகள் கூட இல்லாத  இடங்களில் கட்டுச் சோற்றை சாப்பிடும் சாலையோரங்களில் அடுப்பு மூட்டி உப்புமா கிச்சடி செய்து பசி ஆறியும் இரண்டு நாட்களாக காத்திருந்த தங்களின் உண்மையான அன்பினை வழிநெடுக  பார்த்தபோது மெய்சிலிர்த்துப் போனேன். உலக வரலாற்றில் எதனோடும் ஒப்பிடமுடியாத பாசத்தை உங்கள் ஒவ்வொருவரின் கண்களிலும் கண்ட போது என்னையும் அறியாமல் கண்கள் கலங்கித்தான்  போயின.

எண்ணிலடங்காத இடையூறுகளுக்கும் அதிகாரம் கொண்டு உருவாக்கப்பட்ட தடைகளுக்கும் இடையில் நம் அன்னையை கண்டவுடன் உங்களின் முகங்களில் ஏற்பட்ட மலர்ச்சியையும் மகிழ்ச்சியையும்  காண கண்கோடி வேண்டியிருந்தது. நாங்களெல்லாம் உண்மையின் பக்கமும் தியாகத்தின் பக்கம் நிற்கிற புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மை தொண்டர்கள் என்று எத்தனையோ முறை நெஞ்சு  நிமிர்த்திப் பேசி இருக்கிறேன். அது துளியும் பிசகாத உண்மையிலும் உண்மை என்பதை ஒவ்வொரு கணமும் நீங்கள் நிரூபித்துக் காட்டி அதை எண்ணி எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்.

லட்சக்கணக்கில் கூடிய உங்களை எல்லாம் ஒவ்வோர் இடத்திலும் தளபதிகளை போல வழிநடத்திய என் பெயர் அன்புக்குரிய தலைமை கழக நிர்வாகிகள், மண்டல பொறுப்பாளர்கள், சார்பு அணி  நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள் ஒன்றிய, நகர, பேரூராட்சி, வார்டு கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து நிலைகளில் இருக்கும் சார்பு  அணிகளின் நிர்வாகிகள் பாராட்டி மகிழ்கிறேன். பல இடங்களில் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பெரியவர்கள் தாய்மார்கள் இளைஞர்கள் இளம் பெண்கள் சிறுவர் சிறுமியர் என மகிழ்ச்சி பொங்க நம்  அன்னையை வரவேற்று அத்தனை பேருக்கும் மனப்பூர்வமான நன்றி. அதே நேரத்தில் எந்த இடத்திலாவது பொது மக்களுக்கு ஏதேனும் அசவுகரியம் ஏற்பட்டு இருந்தால் அதற்காக அவர்களிடம் வருத்தம்  தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிகாரத்தில் இருப்போரின் ஆட்டத்திற்கு ஏற்றபடி ஆடிய ஒரு சில அதிகாரிகளை தவிர வெயிலிலும் குளிரிலும் நின்று நமக்கு பாதுகாப்பு அளித்து போக்குவரத்தை ஒழுங்கு செய்து தந்த நம்முடைய  உண்மையான உணர்வுகளை புரிந்து நடந்து கொண்ட அனைத்து காவல்துறை நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. இது தொடக்கம்தான். இதே உணர்வை களத்தில் காண்பித்து நாம் அனைவரும்  ஒற்றுமையோடு நின்று இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிள்ளை என்பதை நிரூபிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. சிலரின் சுய நலத்தால் குறுகிய புத்தியால் திமுக என்னும் தீய  சக்தி மீண்டும் எழுந்து விடுவதை தடுப்பதிலும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மையான நல்லாட்சியை தமிழகத்திற்கு அழைத்து விடுவதிலும் மட்டுமே நம்முடைய முழு கவனம் இருக்க  வேண்டும்.

அம்மா அவர்களுக்கு அளவிட முடியாத தியாகங்களைப் புரிந்த நம் அன்னையான சின்னம்மா அவர்களையும் உண்மை தொண்டர்களோடு நிற்பதால் என்னையும் உச்சகட்ட பதற்றத்தில் உள்ள ஒரு சிலர்  மிகவும் தரம் தாழ்ந்த முறையில் பேசுவதை ஒதுக்கித் தள்ளிவிட்டு எதிரியை தமிழ்நாட்டு மக்களின் எதிரியை களத்தில் வீழ்த்துவதே உங்களின் ஒரே நோக்கமாக இருக்க வேண்டும் என்று அன்போடும்  உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.. சத்திய போராட்டத்தில் நமது வெற்றியை நாளைய சரித்திரம் பேசட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

More