×

நள்ளிரவில் உலா வருகிறது கொடைக்கானல் சாலையில் ‘கொம்பன்’-வாகன ஓட்டிகள் கலக்கம்

பழநி : பழநி-கொடைக்கானல் சாலையில் ஒற்றை யானை நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் பீதியடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழநி மற்றும் ஒட்டன்சத்திரம் வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிகளவு உள்ளன. இந்த யானைகள் வனப்பகுதி எல்லைகளில் உள்ள குதிரையாறு, பாப்பம்பட்டி, காவலப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்குள்  அடிக்கடி நுழைந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

இதனை தடுக்க வனத்துறையினர் அகழி அமைத்தல், சோலார் மின்வேலி அமைத்தல், பட்டாசு வெடித்தல், அதிக ஒளிச்செறிவு கொண்ட விளக்குகளை பயன்படுத்துதல் போன்ற பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டும் பலன் ஏதுமில்லை. இப்பகுதிகளில் இதுவரை யானை தாக்கி 15க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பழநி வனப்பகுதி தொடர் மழையால் பசுமை அடைந்திருந்தது. இதனால் கடந்த சில வாரங்களாக யானைகள் விளைநிலங்களுக்குள் வருவது குறைந்திருந்தது.

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவு பழநி-கொடைக்கானல் சாலையில் தேக்கந்தோட்டம் பகுதியில் காட்டுயானை ஒன்று தனியாக நடமாடியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டனர். சுமார் 30 நிமிடங்கள் சாலையில் நடமாடிய யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீண்ட நாட்களுக்கு பிறகு யானைகள் மீண்டும் வெளியே வந்துள்ளதால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். வனத்துறையினர் தீவிர ரோந்துப்பணி மேற்கொண்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : motorists ,road ,Kodaikanal , Palani: Motorists on the Palani-Kodaikanal road are panicked by a single elephant.
× RELATED திருப்பதிசாரம் டோல்கேட்டில் கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி