×

தொடர்ந்து 4ம் நாளாக வனத்துறைக்கு டிமிக்கி காட்டும் ஆட்கொல்லி யானை

பந்தலூர் : பந்தலூர் அருகே சேரம்பாடி வனச்சரகத்தில் 3 பேரை கொன்ற ஆட்கொல்லி யானையை பிடிக்க நான்காவது நாளாக வனத்துறையினர் களம் இறங்கிய உள்ளனர். அந்த யானை வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது. சேரம்பாடி வனச்சரகம் சேரம்பாடி கண்ணம்பள்ளி பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் ஒரு முதியவரையும், கொளப்பள்ளி டேன்டீ பகுதியில் தந்தை, மகன் இருவரையும் யானை தாக்கி கொன்றது. இதனால், பொதுமக்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, அந்த யானையை பிடிக்க வனத்துறையினர் தயாராகினர். அந்த யானை சேரம்பாடி சப்பந்தோடு பகுதியில் இருப்பதை அடையாளம் கண்டனர். அதன்பின், முதுமலையில் இருந்து கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டு  வன உயிரின மருத்துவர்கள் மூலம் மயக்க ஊசி செலுத்தி கண்காணித்தனர்.

ஆனால், அந்த யானை திடீரென மாயமானதால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் யானை கேரளாவிற்கு சென்றதாக வனத்துறையினர் உறுதிப்படுத்தினர். அதன்பின் யானை மீண்டும் இப்பகுதிக்கு வரலாம் என எதிர்பார்த்து காத்திருந்தனர்.
யானையை கண்காணிப்பதற்காக விருதுநகரில் இருந்து சிறப்பு வனக்குழுவினர் வர வழைத்து கண்காணித்தபோது 50 நாட்களுக்குப்பின் மீண்டும் சேரம்பாடி சப்பந்தோடு வனப்பகுதில் அந்த யானை கூட்டத்துடன் இருப்பது தெரியவந்தது.

இரண்டாவது முறையாக ஆட்கொல்லி யானையை பிடிப்பதற்கு முதுமலையில் இருந்து 5 கும்கி யானைகளையும் கோவை சாடிவயலில் இருந்து ஒரு கும்கி யானையும் அழைத்துவரப்பட்டு யானையை பிடிப்பதற்கு வனத்துறையினர் களம் இறங்கினர்.

நேற்று வரை தொடர்ந்து நான்கு நாட்களாக யானையை கண்காணித்து மயக்க ஊசி செலுத்துவதற்கு மருத்துவ குழுவினர் முயற்சி செய்து வருகின்றனர். யானை வனத்துறையினருக்கு போக்கு காட்டி வனப்பகுதிக்குள் சென்று மறைந்து விடுவதால் வனத்துறையின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. யானையை பிடிப்பதில் வனத்துறையினர், மருத்துவ குழுவினர் தாமதம் காட்டுவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தோட்டத்துக்குள் புகுந்து தப்பியது

வனத்துறையினர் சப்பந்தோடு, குழிவயல், பத்துலைன் உள்ளிட்ட வனப் பகுதிகளில் ஆட்கொல்லி யானை சங்கரை தேடினர். யானை அங்கிருந்து இடம் பெயர்ந்து நாயக்கன்சோலை மூங்கில் காடு பகுதியில் இருப்பது தெரியவந்தது. மூங்கில் புதரில் இருந்த யானையை விரட்டி வெளியே கொண்டு வந்த பின் மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்த தயாரானபோது யானை மயிரிழையில் தப்பி அருகே உள்ள தனியார் தோட்டத்துக்குள் சென்றது. இதனால், மயக்க ஊசி போடுவதில் சிக்கல் ஏற்பட்டது. 4ம் நாளான நேற்றும் வனத்துறையினரின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

Tags : forest ,Timikki , Ooty: In the Ooty roundabout from the two branches at the Ooty Central Bus Stand in the Nilgiris District
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...