×

செங்கோட்டை வழித்தடத்திலும் துரித பணிகள் நெல்லை - திருச்செந்தூர் மின்மயமாக்கல் பணி 2022 மார்ச்சில் நிறைவு பெறும்-தெற்கு ரயில்வே தகவல்

நெல்லை : நெல்லை - திருச்செந்தூர் மற்றும் நெல்லை - செங்கோட்டை ரயில் வழித்தடங்களில் மின்மயமாக்கல் பணிகள் வரும் 2022 மார்ச் மாதத்திற்குள் நிறைவு பெறும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் ரயில்வே வழித்தடங்களில் மின்மயமாக்கல் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. டீசல் பயன்பாட்டை குறைக்கவும், காற்று மாசினை தடுக்கவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு 2014 வரை பல்வேறு கட்டங்களாக மின்மயமாக்கல் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.
மீதமுள்ள தமிழக வழித்தடங்களை மின்மயமாக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. தெற்கு ரயில்வேயில் 587.53 கோடி மதிப்பீட்டில் 985 கிமீ நீளத்துக்கு மின் மயமாக்கல் பணிக்கு கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் எல் அண்ட் டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதன்படி மதுரை - மானாமதுரை, சேலம் - கடலூர், திண்டுக்கல் - பாலக்காடு, பொள்ளாச்சி - போத்தனுர், ஷோரனுர் - நிலாம்பூர், செங்கோட்டை - தென்காசி - திருநெல்வேலி - திருச்செந்தூர், விருதுநகர் - தென்காசி, திருச்சி - மானாமதுரை - விருதுநகர் ஆகிய வழித்தடங்களில் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த மின் மயமாக்கல் பணிகள் குறித்து தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சார்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா மத்திய ரயில்வே மின் மயமாக்கல் நிறுவனத்துக்கு கேள்வி கேட்டிருந்தார். அதற்கு தெற்கு ரயில்வே அளித்துள்ள பதிலில் ‘செங்கோட்டையில் இருந்து நெல்லை வரை 72 கிமீ தூரம் வரும் மார்ச் 2022க்குள் பணிகள் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நெல்லையில் இருந்து திருச்செந்தூர் வரையிலான 61 கிமீ தூரத்திற்கான பணிகளும் வரும் மார்ச் 2022ல் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது’.

நெல்லை - திருச்செந்தூர் வழித்தடத்தை பொறுத்தவரை தற்போது குறிச்சி, பாளையங்கோட்டை பகுதிகளில் மின்மயமாக்கல் பணிகள் தீவிரம் அடைந்து வருகின்றன. மேலும் இந்த தடங்களில் 21.6 மெகா வாட் கொண்ட துணை மின் நிலையங்கள் வீரவநல்லூர் மற்றும் ஆறுமுகனேரியில் அமைக்கப்படும்.
மதுரையில் இருந்து மானாமதுரை வரை 46 கிமீ இந்த மாதமும், மானாமதுரையில் இருந்து ராமநாதபுரம் வரை 59 கிமீ இவ்வாண்டு ஜூன் மாதமும், ராமநாதபுரத்தில் இருந்து மண்டபம் வரை 37 கிமீ  நடப்பாண்டு ஆகஸ்ட்டுக்குள் மின் மயமாக்கல் பணிகள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடத்தில் 21.6 மெகா வாட் கொண்ட துணை மின் நிலையங்கள் மானாமதுரை மற்றும் ராமநாதபுரத்தில் அமைக்கப்பட உள்ளன.

விருதுநகரில் இருந்து தென்காசி வரை 122 கிமீ தூரத்திற்கான பணிகள் வரும் 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதமும் முடிக்கப்பட உள்ளது.
தென்மாவட்டங்களில் மின்மயமாக்கல் நிறைவுற்றால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பாண்டியராஜா கூறுகையில், ‘‘தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய ரயில்களான பொதிகை, சிலம்பு, கொல்லம் எக்ஸ்பிரஸ்கள் மற்றும் செந்தூர் உள்ளிட்ட ரயில்களில் பயண நேரம் அரைமணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை குறைய வாய்ப்புள்ளது.

நெல்லையை மையமாக கொண்டு தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மெமு ரயில்கள் அதிகமாக இயக்க முடியும்.’’ என்றார்.2004ம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட விருதுநகர் - தென்காசி வழித்தடத்தில் 17 ஆண்டுகள் கடந்த பின்னர் தற்போதுதான் மின்மயமாக்கல் பணிகள் நடக்கவுள்ளது. மேலும் இந்த வழித்தடத்திற்கான பணிகளே கடைசியில் நிறைவுறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Nellai - Thiruchendur , Nellai: Electrification works on Nellai - Thiruchendur and Nellai - Chengottai railway lines will be completed by March 2022.
× RELATED வெள்ள பாதிப்பால்...