×

அறுவடை வைக்கோல் கால்நடைகளுக்கு பயன்படுத்த முடியாத அவலம்-விவசாயிகள் வேதனை

*குரலற்றவர்களின்  குரல்

கொள்ளிடம் : அறுவடை செய்யப்பட்ட வைக்கோல், கால்நடைகளுக்கு பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுகை ஆகிய 5 மாவட்டங்களில் சம்பா, தாளடி பயிர்கள் 11 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நிலையில் புரெவி, நிவர் புயல் மழையால் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தது. சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வேண்டுமென விவசாய சங்கங்கள் கோரிக்கை வைத்தன.ஆனால் தமிழக அரசு எக்டேர் ஒன்றுக்கு ரூ.20ஆயிரம் நிவாரணமாக அறிவித்தது.

 மழையால் சேதமடைந்த பயிர்களை பார்வையிட டெல்டா மாவட்டங்களுக்கு மத்தியகுழு வந்து சென்றது. இதைதொடர்ந்து கணக்கெடுப்பு பணிகள் துவங்கிய நிலையில் பருவம் தவறி டிசம்பர் மாத இறுதியில் துவங்கி ஜனவரி மாதம் 2வது வாரம் வரை மழை பெய்தது. இதனால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சம்பா பயிர்களும் நீரில் மூழ்கியது.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் புரவி புயல் மற்றும் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டது. தற்போது எஞ்சிய பயிர்களை விவசாயிகள் அறுவடை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அறுவடைக்கு இயந்திர செலவு அதிகமாக இருப்பதாலும், ஆட்கள் கூலியும் அதிகமாக இருப்பதாலும் விவசாயிகள் கடும் சிரமத்துக்கு இடையில் சேதமடைந்த பயிர்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்கள் ஏக்கருக்கு 5 மூட்டை முதல் 7 மூட்டை வரையில் கிடைப்பதால் வீட்டின் உணவு தேவைக்கு மட்டுமே பயன்படும். விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: பருவம் தவறி பெய்த மழையால் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. மழைக்கு பிறகு உளுந்து விதைக்கும் பணியும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது அறுவடை செய்யப்பட்ட வைக்கோல், கால்நடைகளுக்கு பயன்படுத்த முடியாத நிலையும் இருந்து வருகிறது. வரும் ஆண்டுகளில் கால்நடைகளுக்கு வைக்கோல் கிடைப்பது கேள்விக்குறி தான்.

தமிழக அரசு, விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. ஆனால் கூட்டுறவு வங்கிகளில் வரையறை செய்யப்பட்டு குறிப்பிட்ட விவசாயிகளுக்கு மட்டும் கடன் வழங்கப்பட்டுள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அதிகளவில் கடன் வாங்கி சாகுபடி பணியை செய்துள்ளோம். இந்த கடனையும் அடைக்க முடியாத நிலை உள்ளது. எனவே தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய விவசாய கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றனர்.

Tags : Kollidam: Farmers are suffering as the harvested hay comes from an unusable condition for livestock
× RELATED லால்குடி அருகே ரயிலில் பயணம் செய்த இளைஞர், தவறி கீழே விழுந்து படுகாயம்