பர்கூர் அருகே பரபரப்பு நரபலிக்காக சிறுவன் கொடூர கொலை?4 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை

கிருஷ்ணகிரி : பர்கூர் அருகே சிறுவனை கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் நரபலி கொடுக்க இக்கொலை நடந்துள்ளதா எனவும் விசாரிக்கின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா காரகுப்பம் கொட்லேட்டி கிராமத்திலிருந்து, உச்சன் கொல்லைக்கு செல்லும் வழியில் மல்லேஸ்வரன் மலை அடிவாரத்தில், நேற்று முன்தினம் மாலை, 10 வயது மதிக்கத்தக்க சிறுவன், கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தான்.

இதுகுறித்த தகவலின் பேரில், பர்கூர் டிஎஸ்பி தங்கவேல், இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் கொலையுண்ட சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கொலை செய்யப்பட்ட சிறுவன் உடலில் பிரம்பால் அடித்தும், தீயால் சூடு வைக்கப் பட்ட காயங்களும் இருந்தன. அவனது வாயில் மிளகாய் பொடி இருந்தது. மொட்டை அடிக்கப்பட்டிருந்த அந்த சிறுவன் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவன், அவனை கொன்று இங்கு வீசியது யார் என்ற விவரங்கள் எதுவும் உடனடியாக தெரியவில்லை.

யாராவது தொழிலதிபர் வீட்டுப்பிள்ளையை பணத்துக்காக கடத்தி சித்ரவதை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், மேலும் மொட்டை அடித்துள்ளதால் நரபலி கொடுக்க முயற்சி நடந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக, மாவட்ட எஸ்பி பண்டி கங்காதர், பர்கூர் டிஎஸ்பி தங்கவேல்  மேற்பார்வையில் எஸ்எஸ்ஐக்கள் திருநாகரன், வெங்கடாசலம் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இவர்களில் ஒரு குழுவினர் ஆந்திரா மாநில எல்லையிலும், மற்றொரு  குழுவினர் திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்,சிறுவனின் புகைப்படத்தை அனைத்து காவல்  நிலையத்திற்கும் அனுப்பி வைத்தும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. சிறுவனின் உருவ அமைப்பை பார்த்தால் ஆந்திராவை சேர்ந்தவராக இருக்கலாம் என கூறப்படுகிறது.

Related Stories:

>