×

பேரவைக்குள் குட்கா கொண்டு சென்றதாக ஸ்டாலின் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்களுக்கு உரிமைக்குழு அனுப்பிய 2வது நோட்டீஸ் ரத்து : உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: சட்டப்பேரவைக்குள் குட்கா பொருட்களை கொண்டு சென்றதாக திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிமைக்குழு  அனுப்பிய 2வது நோட்டீஸை ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வழக்கின் பின்னணி

கடந்த 2017ம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்ததாக பேரவை உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீஸை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளதாக கூறி அதை ரத்து செய்தது.எனினும் தவறுகளை களைத்து புதிய நோட்டீஸ் அனுப்பலாம் என தெரிவித்திருந்தது. இதையடுத்து, உரிமைக்குழு கூடி மீண்டும் அனுப்பிய இரண்டாவது நோட்டீஸை  எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏ-க்களும்,தி. மு.க விலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட கு.க செல்வமும் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தார். இந்த இடைக்கால தடையை நீக்கக் கோரி சட்டப்பேரவை செயலாளர் மற்றும் உரிமைக்குழு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் இறுதி விசாரணை நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா முன்பு  நடைபெற்றது. சட்டப்பேரவை செயலாளர் சார்பில் அரசின் மூத்த வழக்கறிஞர் சோமையாஜி ஆஜராகி வாதிட்டார்.  தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் உரிமைக்குழு சார்பில் ஆஜராகி வாதிட்டார்.அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

வழக்கின் தீர்ப்பு

இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா இன்று தீர்ப்பளித்தார். அதில் சட்டப்பேரவைக்குள் குட்கா பொருட்களை கொண்டு சென்றதாக திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிமைக்குழு  அனுப்பிய 2வது நோட்டீஸை ரத்து செய்து  நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா உத்தரவிட்டுள்ளார்.உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீஸை உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், 2வது நோட்டீஸும் ரத்து செய்யப்பட்டுள்ளது.


Tags : Cancellation ,Rights Committee ,Stalin ,Assembly: High Court , Legislators, Gutka, Stalin
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...