×

விளையாட்டு துளிகள்

22 ஆண்டுகளுக்கு பிறகு...
சேப்பாக்கத்தில் இது வரை  33 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன.  அவற்றில் இந்தியா 14,  இங்கிலாந்து 4, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. 11 போட்டிகள் டிராவில் முடிந்தன. ஒரு போட்டி சரிசமன் (டை) ஆனது. 1999, ஜனவரியில் பாகிஸ்தான் 12 ரன் வித்தியாசத்தில் வென்றதுதான் இந்தியா இங்கு சந்தித்த கடைசி தோல்வி. அதன்பிறகு 22 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் இங்கிலாந்திடம் தோல்வியை சந்தித்துள்ளது. இடையில் நடந்த 8 டெஸ்டில் ஒன்றில் கூட இந்தியா தோற்றதில்லை.

இங்கிலாந்துக்கு 4வது வெற்றி
இந்தியா - இங்கிலாந்து அணிகள் சேப்பாக்கத்தில் 1934 முதல் 2016 வரை 9 டெஸ்ட் போட்டிகளில் மோதியிருந்தன. அவற்றில் இந்தியா 5, இங்கிலாந்து 3ல் வென்ற நிலையில், ஒரு போட்டி டிரா ஆனது. நேற்றைய வெற்றியின் மூலம் இங்கிலாந்து 4வது வெற்றியை சேப்பாக்கத்தில் பதிவு செய்தது.

வெற்றிகரமான கேப்டன்
இங்கிலாந்து அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றுத் தந்த கேப்டன் என்ற சாதனையை, முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனுடன் (26 வெற்றி, 51 டெஸ்ட்) பகிர்ந்து கொண்டுள்ளார் ஜோ ரூட் (26 வெற்றி, 47 டெஸ்ட்). ஆண்ட்ரூ ஸ்டிராஸ் (24 வெற்றி, 50 டெஸ்ட்), அலஸ்டர் குக் (24 வெற்றி, 59டெஸ்ட்), பீட்டர் மே (20 வெற்றி, 41டெஸ்ட்) அடுத்த இடங்களில் உள்ளனர். அது மட்டுமல்ல, கேப்டனாக தான் சதம் விளாசிய எந்த டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து தோற்றதில்லை என்ற சாதனையையும்  ஜோ ரூட் தக்கவைத்துக் கொண்டுள்ளார். அவர்  நேற்று வரை கேப்டனாக இருந்து சதமடித்த 20 போட்டிகளில் 16ல் வெற்றியும், 4ல் டிராவும் செய்துள்ளார்.

ஆசிய மண்ணில் அசத்தல்
ஆசிய நாடுகளில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து அதிக வெற்றிகளைப் பதிவு செய்த வேறு கண்ட நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து 2வது இடம் பிடித்துள்ளது. முதல் இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து 7 வெற்றிகளை (2002 முதல் 2004) பதிவு செய்துள்ளது. இங்கிலாந்து 2018 முதல் நேற்று வரை தொடர்ந்து 6 டெஸ்ட்களில் வென்றுள்ளது. இந்த 6 போட்டிகளுக்கும் ஜோ ரூட்தான் கேப்டன். ஆசியாவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இதற்கு முன்பு  தென் ஆப்ரிக்கா கேப்டன் ஸ்மித் 21 டெஸ்டில்  8 வெற்றி பதிவு செய்துள்ளார்.



Tags : 9 Test matches between India and England from 1934 to 2016 in Chepauk
× RELATED 12 ரன் வித்தியாசத்தில் டெல்லியை...