உத்தரகாண்ட் வெள்ள பலி 31 ஆக உயர்ந்தது 30 பேரை உயிருடன் மீட்க 3வது நாளாக கடும் முயற்சி: மாயமான 175 பேரை தேடும் பணி தீவிரம்

டேராடூன்:  உத்தரகாண்டில் பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் 30 பேரை உயிருடன் மீட்க 3வது நாளாக நேற்றும் மீட்பு பணி நடந்தது.  உத்தரகாண்ட் மாநிலத்தில் நந்தாதேவி பனிப்பாறை உடைந்ததால் கடந்த ஞாயிறன்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், கங்கை ஆற்றில் கட்டப்பட்டு இருந்த தபோவான், ரிஷிகங்கா நீர் மின்நிலையங்கள் நாசமாகின.

இங்கு பணியாற்றிய 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இந்தோ - திபெத் படை வீரர்கள், தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர், மாநில போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று மேலும் 2 சடலங்கள் மீட்கப்பட்டன. இதுவரையில் மொத்தம் 31 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. காணாமல் போன 175 பேரை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தபோவான் நீர் மின் நிலையம் அருகே 12 அடி உயரமும், 2.5 கிமீ நீளமும் கொண்ட சுரங்கத்தில் சிக்கியுள்ள 30 தொழிலாளர்களை உயிருடன் மீட்பதற்கான முயற்சி, நேற்றும் 3வது நாளாக இரவு பகலாக நடந்தது. சுரங்கம் முழுவதும் சேறு நிரம்பி உள்ளதால், மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  அவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.  இதேபோல், மேலும் பல சுரங்கங்கள், பாலங்கள் இடிந்த இடங்களிலும் மீட்பு பணிகள் நடக்கிறது. உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், சமோலி மாவட்டத்தில் பனிச்சரிவால் பாதிக்கப்பட்ட கிராமங்களை நேற்று பார்வையிட்டார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘‘சுரங்கத்தில் சிக்கியவர்களை உயிருடன் மீட்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்,’’ என்றார். திடீர் வெள்ளத்தால் 13 எல்லையோர கிராமங்கள், மாநிலத்தின் பிற பகுதிகளுடன் இருந்து துண்டிக்கப்பட்டு உள்ளது. அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு 100 ரேஷன் பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்கள் ஹெலிகாப்டர் மூலமாக வழங்கப்படுகிறது.

போர்க்கால அடிப்படையில் மீட்பு பணி

உத்தரகாண்ட் வெள்ள பாதிப்பு குறித்து மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று கூறுகையில், ‘‘பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடக்கின்றன. திங்கள் வரையில் 20 பேர் இறந்துள்ளது உறுதியாகி இருக்கிறது. மேலும், 197 பேரை காணவில்லை. நீர்மின் திட்டப்பணியில் ஈடுபட்டு இருந்த 139 பேர், ரிஷிகாங்கா நிலையத்தில் 46 ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் 12 பேரை காணவில்லை,” என்றார்.

Related Stories:

>