×

திருவாரூர் தொகுதியில் களமிறங்கிய பாஜ புலம்பும் நிர்வாகிகள்

திருவாரூர் தொகுதியில் கடந்த 1977ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையில் நடைபெற்ற 13 தேர்தல்களிலும் திமுக கூட்டணி 12 முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த தொகுதியானது திமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. தொடர்ந்து தோல்வியை அதிமுக சந்தித்து வருகிறது. 2018ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்கு பின்னர் 2019ல் இடைத்தேர்தல் நடந்தது. மாவட்ட செயலாளர் பூண்டிகலைவாணன் வெற்றி பெற்றார். 2019 இடைத்தேர்தலின் போது நாகை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜீவானந்தத்தை அதிமுக தலைமை களமிறக்கிய நிலையில் வழக்கமாக கிடைக்கும் வெறும் 53 ஆயிரம் ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது. எந்த காலத்திலும் தம்மால் வெற்றி பெற முடியாது என முடிவு செய்த அதிமுக தலைமை, தற்போது தங்கள் கூட்டணியில் இருந்து வரும் பாஜகவுக்கு இந்த தொகுதியை ஒதுக்குவதற்கு முடிவு செய்துள்ளது. அதற்கு ஏற்றார்போல் பாஜகவும் தற்போது பணியினை துவக்கியுள்ளது.

அதன்படி, திருவாரூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தினை அக்கட்சியின் மாநில அமைப்பு பொதுசெயலாளர் கேசவ.விநாயகன் திறந்து வைத்தார். பின்னர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், திருவாரூர் தொகுதி நமக்கு ஓதுக்கப்படுவது உறுதி என்பதால் அதற்கேற்ப பொறுப்பாளர்கள் பணியில் ஈடுபட வேண்டும் என தெரிவித்தார். கடந்த 2016 தேர்தலின் போது நோட்டா பெற்ற 2 ஆயிரத்து 177 வாக்குகள்விட, 923 வாக்குகள் குறைவாக பாஜக வேட்பாளர் ரங்கதாஸ் 1,254 வாக்குகள் மட்டுமே பெற்றார். தற்போது இந்த தொகுதியில் தங்களால் வெற்றி பெற முடியுமா, குறைந்த பட்சம் டெபாசிட் கூட கிடைக்குமா என்று அக்கட்சியினர் தற்போது புலம்ப துவங்கி விட்டனர்.

* சசிகலாவுக்கு எதிராக சர்ச்சையை கிளப்பும் விரல்வெட்டி ஏட்டு
சேலத்தில் அதிமுக வெற்றிக்காக விரல்களை வெட்டிக்கொண்டு பிரபலமான ஏட்டு ரத்தினம், சசிகலா தமிழகத்தில் நுழைய எதிர்ப்பு தெரிவித்தும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். சேலம் மாவட்டம் உடையாப்பட்டியை அடுத்த கோம்பைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம் (72). போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்த இவர், தீவிர அதிமுக ஆதரவாளர். கடந்த 2004ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணி வெற்றிபெற வேண்டி, அயோத்தியாபட்டணம் ராமர் கோயிலில் தனது விரல்களை வெட்டிக்கொண்டார். கடந்த 2007ம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெற்ற அவர், எம்ஜிஆர் வேடமிட்டுக்கொண்டு அதிமுகவிற்கு ஆதரவாக பிரசார கூட்டங்களில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக பொதுவெளியில் வருவதை தவிர்த்த அவர், தற்போது மீண்டும் தேர்தல் களத்தில் குதித்துள்ளார். சமீபத்தில் எம்ஜிஆர் வேடமணிந்து கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். திரும்பி போ... திரும்பி போ.. என்ற வாசகம் அடங்கிய போஸ்டரை தன்னுடன் எடுத்துவந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘அதிமுக கூட்டணி வெற்றிக்காக பல தேர்தல்களில் பிரசாரம் செய்துள்ளேன். ஜெயலலிதாவுடன் கூட இருந்தே குழி பறித்தவர் சசிகலா. அவர் தமிழகத்திற்குள் நுழையக்கூடாது. தமிழக முதல்வர் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். வரும் தேர்தலிலும் அதிமுகவுக்காக பிரச்சாரத்தில் ஈடுபடுவேன்,’’ என்றார்.

Tags : BJP ,mourning executives ,Thiruvarur ,constituency , BJP mourning executives in Thiruvarur constituency
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...