×

உங்களின் அறிவிப்பால் தான் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி: மு.க.ஸ்டாலினை சந்தித்து அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழுவினர் நன்றி

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் பல்வேறு விவசாய சங்கங்கள் மற்றும் கூட்டு இயக்கங்கள் ஒருங்கிணைந்த அனைத்து விவசாயிகள் சங்கம் ஒருங்கிணைப்புக் குழுவினர் நேரில் சந்தித்து பேசினர். அப்போது, “பருவ ஆண்டில் பெய்த பெருமழையால் விவசாயிகள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இப்பருவத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் அறுவடை செய்யும் காலத்தில் வெள்ளத்தில் மூழ்கி, தமிழகம் முழுவதும் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டது. இச்சமயத்தில், விவசாயிகள் நிர்கதியாக கைவிடப்பட்ட நிலையில், கூட்டுறவு கடன்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற விவசாயக் கடன்கள் என  முழுமையாக தள்ளுபடி செய்து, இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்து பல போராட்டங்களை நடத்தினார்கள்.

இச்சூழ்நிலையில், எதிர்க்கட்சித் தலைவராகிய தாங்கள், விவசாயிகள் மீது கொண்ட அன்பால், ”நான் ஆட்சிக்கு வந்த உடன் விவசாயிகள் பெற்ற கடன் அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்வேன்” என்று அறிவித்தீர்கள். இது விவசாயிகளுக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதுவரை வாய்மூடி இருந்த தமிழக அரசின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தலை கருத்தில் கொண்டு, விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். எப்படியோ, இன்னும் சில மாதங்களில் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய கடன் தள்ளுபடி பலன், தங்களின் அறிவிப்பால் உடனடியாக கிடைத்திருக்கிறது. இதனால், லட்சக்கணக்கான விவசாயிகள் தங்களால் பலன் அடைந்திருக்கிறார்கள். அதற்காக தமிழக விவசாயப் பெருங்குடி மக்களின் சார்பில் தங்களுக்கு நன்றியை செலுத்துகிறோம்” என்று கூறினர்.

இந்த சந்திப்பின் போது அகில இந்திய விவசாயிகள் போராட்ட குழுவின்  மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் பி.சண்முகம், தமிழ்நாடு  விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வே.துரைமாணிக்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான சிவகங்கை எஸ்.குணசேகரன், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.தெய்வசிகாமணி, காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் இளங்கீரன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலச் செயலாளர் அக்ரி கா.பசுமைவளவன், இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.எஸ்.தனபதி.

தமிழ்நாடு ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் அரங்க.சங்கரய்யா, தமிழ்நாடு ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் மு.சரவணன், விவசாயிகள் சட்ட பாதுகாப்பு சங்கத்தின் பொதுச்செயலாளர் கிரிதரன், சட்டப் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் அசோக் லோடா, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கிருஷ்ணகிரி கே.எம்.ராமகவுண்டர், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் மன்னார்குடி டி.பி.கே.ராஜேந்திரன், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் மாநிலச் செயலாளர் திருச்சி சண்முகசுந்தரம், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் மாநிலச் செயலாளர் வேளாங்கண்ணி இளங்கோவன், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின்  மாநில துணைத் தலைவர் காஞ்சிபுரம் எழிலன், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் திருத்துறைப்பூண்டி சந்திரசேகர், விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் அக்கிரி.முருகானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர். இதுவரை வாய்மூடி இருந்த முதல்வர் எடப்பாடி தேர்தலை கருத்தில் கொண்டு, விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருக்கிறார்.

Tags : announcement ,MK Stalin ,Farmers' Coordinating Committee , Debt waiver for farmers is due to your announcement: Thank you to all the farmers' union coordinators who met MK Stalin
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...