பாஜவில் எம்.பி. சீட், மத்திய அரசு டெண்டர் பெற்று தருவதாக சென்னை தொழிலதிபரிடம் ரூ.1.50 கோடி மோசடி: குற்றவாளியை பிடிக்க மைசூர் விரைந்தது சிபிசிஐடி தனிப்படை

சென்னை: பாஜ கட்சியில் எம்.பி. சீட் மற்றும் மத்திய அரசின் டெண்டர்களை பெற்று தருவதாக சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.1.50 கோடி மோசடி செய்த நபரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் மைசூர் விரைந்துள்ளனர்.

பிரதமர் மற்றும் தமிழக ஆளுநர் பெயர்களை பயன்படுத்தி மத்திய அரசு டெண்டர்கள் பெற்று தருவதாகவும், பாஜ கட்சி சார்பில் எம்.பி. சீட் வாங்கி தருவதாகவும் ஒரு கும்பல் தொழிலதிபர்களை குறிவைத்து தொடர் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது. இதை நம்பி பல தொழிலதிபர்கள் பல கோடி ரூபாய் ஏமாந்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர்கள் பலர் தமிழக ஆளுநர் மாளிகையில் நேரடியாக வந்து புகார் அளித்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில், சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஜான் என்பவர் தமிழக ஆளுநர் மாளிகையில் பரபரப்பு புகார் ஒன்று அளித்துள்ளார். மைசூரை சேர்ந்த மகாதேவ் ஐயா என்பவர், ஆளுநர் மூலம் பாஜ எம்.பி.சீட் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார். போலி இ-மெயில் அனுப்பி ரூ.1.50 கோடி பணம் பெற்றார்., அதன் பிறகு எம்பி சீட் வாங்கி தரவில்லை. பணத்தையும் திரும்ப தரவில்லை என்று புகாரில் கூறியுள்ளார்.

புகாரின்படி ஆளுநர் பன்வாரிலால் இந்த மோசடி குறித்து விசாரணை நடத்த தமிழகம் டிஜிபி திரிபாதிக்கு உத்தரவிட்டார். டிஜிபி இந்த மோசடி குறித்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி சிபிசிஐடி போலீசார் தொழிலதிபர் ஜான் அளித்த புகாரின்படி விசாரணை நடத்தினர். அதில், மைசூரில் உள்ள மோசடி நபரான மகாதேவ் ஐயா பிரதமர் அலுவலக அதிகாரிகள் மூலம் மத்திய அரசு டெண்டர்கள் எடுத்து தருவதாக பல தொழில் நிறுவனங்களிடம் பல கோடி பெற்று மோசடி செய்தது விசாரணையில் தெரியந்தது.

அதைதொடர்ந்து குற்றவாளி மகாதேவ் ஐயா மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் குற்றவாளியை பிடிக்க சிபிசிஐடி போலீசாரின் தனிப்படை மைசூரில் முகாமிட்டு தேடி வருகின்றனர். மகாதேவ் ஐயா என்பவரை கைது செய்தால் தான், இந்த மோசடியில் யார் யார் ஈடுபட்டுள்ளனர். இதன் பின்னணியில் உள்ள நபர்கள் யார் என்பது குறித்து முழுமையாக தெரியவரும் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். பிரதமர் மற்றும் ஆளுநர் பெயரில் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

More