×

இளவரசி, சுதாகரன் சொத்துகள் அரசுடமை ஆனதை தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா சொத்துகளும் பறிமுதல்? தமிழக அரசு பரிசீலனை

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் சிக்கியுள்ள இளவரசி, சுதாகரனுக்குச் சொந்தமான பல நூறு கோடி சொத்துக்களை தமிழக அரசு பறிமுதல் செய்துள்ளது. அதேபோல, ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் சொத்துகளை பறிமுதல் செய்ய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது. ஜெயலலிதா 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை முதல்வராக இருந்த நேரத்தில் அவரும், தோழி சசிகலா, அண்ணன் மனைவி இளவரசி, வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக புகார் எழுந்ததால் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்கள் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது. உச்சநீதிமன்றமும் தீர்ப்பை உறுதி செய்தது.

ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து, மற்ற 3 குற்றவாளிகளுக்கும் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. 2017 பிப்ரவரி 15ம் தேதி 3 பேரும், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். சசிகலா, இளவரசி ஆகியோரது தண்டனைகாலம் முடிந்து சென்னைக்கு நேற்று காலையில் வந்தனர். இந்நிலையில், இளவரசி, சிறையில் உள்ள சுகாதாரன் ஆகியோருக்கு சொந்தமான சொத்துகளை அரசு உடமையாக்கி, தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் ஆயிரம்விளக்கு வாலஸ்கார்டன் பகுதியில் உள்ள கட்டிடங்கள், ராம் நகரில் உள்ள பல கோடி மதிப்புள்ள கட்டிடங்கள் அரசுடமையாக்கப் பட்டன. இந்தநிலையில், காஞ்சிபுரம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் ஆகியோர் தங்கள் பகுதியில் உள்ள இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான சொத்துகளை அரசுடைமையாக்கி அறிவித்துள்ளனர்.

இதில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு, கிதிரிப்பேட்டை பகுதிகளில் சசிகலாவின் உறவினர்கள் இளவரசி, சுதாகரன் பங்குதாரர்களாக உள்ள சுமார் 141.75 ஏக்கர் பரப்பளவுடைய நிலத்தை பறிமுதல் செய்து தமிழக அரசுக்கு சொந்தமானது என அறிவிப்பு செய்து காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் கணக்கில் வைத்தனர். இதன் மதிப்பு சுமார் 300 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் 6 இடங்களில் சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான சிக்னோரா என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 15.26 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் சவுக்கு தோப்பு நெற்பயிர்கள், தென்னை மரங்கள், பணப்பியிர்கள் மற்றும் தோட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த இடங்களை கலெக்டர் ஜான்லூயிஸ் அரசுக்கு சொந்தமானது, அரசுடமையாக்கி உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து தஞ்சாவூர், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள இருவருக்கும் சொந்தமான சொத்துகளையும் அரசுடமையாக்கி அந்த மாவட்ட கலெக்டர்கள் நேற்று  உத்தரவிட்டனர். அதில் தூத்துக்குடியில் மட்டும் 1050 ஏக்கர் நிலங்களை  அரசுடமையாக்கினர். உச்சநீதிமன்றம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் உத்தரவிட்டாலும், தீர்ப்பு வழங்கிய பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் சமீபத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்து, அனுமதி வாங்கி இந்த சொத்துகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த சொத்து குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா, 2வது குற்றவாளியான சசிகலா ஆகியோரின் சொத்துகளை தமிழக அரசு இன்னும் அரசுடமையாக்கவில்லை.

ஜெயலலிதா சொத்துகளை அரசுடமையாக்கினால், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படலாம் என்று முதலில் தமிழக அரசு கருதியது. ஆனால் ஜெயலலிதாவின் சொத்துகள் தற்போது சசிகலாவின் வசம்தான் உள்ளன. இதனால் இருவரது சொத்துக்களையும் அரசுடமையாக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. அதில் சென்னை அருகே உள்ள சிறுதாவூர் பங்களா, ஊட்டியில் உள்ள கோடநாடு எஸ்டேட் ஆகியவையும் அடக்கம். இந்த சொத்துகளை அரசுடமையாக்குவது குறித்து அரசு தீவிர பரிசீலனை செய்து வருகிறது. விரைவில் அதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபடும் என்று அரசு தரப்பில் தெரிவித்தனர்.

* சொத்து குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா, 2வது குற்றவாளியான சசிகலா ஆகியோரின் சொத்துகளை தமிழகஅரசு இன்னும் அரசுடமையாக்கவில்லை.
* ஜெயலலிதாவின் சொத்துகளை அரசுடமையாக்கினால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என முதலில் தமிழக அரசு கருதியது. அவரது சொத்துகள் தற்போது சசிகலாவின் வசம்தான் உள்ளன.
* தற்போது, இருவரின் சொத்துகளையும் அரசுடமையாக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

Tags : Princess ,Sudhakaran ,Sasikala ,Jayalalithaa ,Tamil Nadu ,Government , Princess, Sudhakaran assets confiscated Jayalalithaa, Sasikala assets confiscated? Government of Tamil Nadu Review
× RELATED ரம்ஜான் விடுமுறை, கொளுத்தும் வெயில்...