×

வால்மீகி வகுப்பினருக்கு 7.5% இடஒதுக்கீடு: விரைவில் செயல்படுத்தப்படும்: முதல்வர் எடியூரப்பா உறுதி

தாவணகெரே: மாநிலத்தில் வால்மீகி வகுப்பினருக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் எடியூரப்பா உறுதியளித்தார். கர்நாடக மாநில வால்மீகி சங்கத்தின் சார்பில் வால்மீகி திருவிழா தாவணகெரே மாவட்டம், ஹரிஹர் தாலுகா, ராஜனஹள்ளியில் நேற்று நடந்தது. மடாதிபதி பிரசன்னானந்தபுரிசுவாமி தலைமையில் நடந்த விழாவில் அமைச்சர்கள் பி.ஸ்ரீராமுலு, ரமேஷ் ஜார்கிஹோளி, ஆனந்த சிங், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், மாநில காங்கிரஸ் செயல்தலைவர் சதீஷ் ஜார்கிஹோளி, கன்னட நடிகர் தர்ஷன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் கன்னட நடிகர்  சுதீப்புக்கு வால்மீகி ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய தலைவர்கள், வால்மீகி வகுப்பினர் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட துறைகளில் மிகவும் பின்தங்கியுள்ளனர். பழங்குடியின வகுப்பினருக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டில் வால்மீகி வகுப்பினருக்கு போதிய வாய்ப்பு கிடைக்காமல் வஞ்சிக்கப்படுகிறார்கள். ஆகவே பழங்குடியின வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை 7.5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். இதுவரை எந்த முடிவும் அறிவிக்கவில்லை. இன்று (நேற்று) இட ஒதுக்கீடு உயர்த்துவது தொடர்பான அறிவிப்பு ெவளியாகும் என்று எதிர்பார்த்ததும் பொய்த்துள்ளதாக மடாதிபதி பிரசன்னானந்தபுரி சுவாமி ஆதங்கம் வெளிப்படுத்தினார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முதல்வர் எடியூரப்பா பேசும்போது, மாநிலத்தில் பின்தங்கியுள்ள சமூகத்தின் மேம்பாட்டிற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறோம். வால்மீகி வகுப்பினருக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி நாகமோகன்தாஸ் தலைமையில் அமைக்கப்பட்ட குழு மாநில அரசுக்கு சிபாரிசு செய்துள்ளது. இந்த அறிக்ைக மீது ஆய்வு செய்வதற்காக துணைமுதல்வர் கோவிந்தகார்ஜோள் தலைமையில் அமைச்சரவை துணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் அமைச்சர்கள் பி.ஸ்ரீராமுலு, ரமேஷ்ஜார்கிஹோளி உறுப்பினர்களாக உள்ளனர்.

அமைச்சரவை துணை குழு அறிக்கை கொடுத்தபின், எனது தலைமையில் நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து தீர்மானமாக நிறைவேற்றியபின் செயல்படுத்தப்படும். அதற்கு சிறிது காலம் தேவைப்படும். மேடையில் இட ஒதுக்கீடு தொடர்பாக மடாதிபதி மிகவும் கவலையுடன் பேசியது மட்டுமில்லாமல், அரசுக்கு காலக்கெடு விதித்தார். அவர் பேசியதில் எனக்கு வருத்தம் கிடையாது. பின்தங்கிய சமூகத்தினரின் குரலாக அவர் பேசியுள்ளதை நான் ஏற்று கொள்கிறேன்’’ என்றார். விழாவில் நாட்டு புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

முதல்வருக்கு எச்சரிக்கை
வால்மீகி சமூகத்தினரின் மேம்பாட்டிற்காக இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை நிறைவேற்றப்பட வில்லை. காலஅவகாசம் தேவைப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார். இட ஒதுக்கீடு வழங்கவில்லை என்றால் நான் உண்ணாவிரதம் இருப்பேன். எனக்கு ஏதாவது அசம்பாதவிதம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டாலோ, இறந்தாலோ அதற்கு முதல்வர் எடியூரப்பாவே பொறுப்பேற்க வேண்டும் என்று மடாதிபதி பிரசன்னானந்தபுரிசுவுாமி எச்சரிக்கை விடுத்தார்.

Tags : Eduyurappa ,Valmiki , Valmiki, reservation, Chief Eduyurappa, confirmed
× RELATED நோய் தீர்க்கும் மருந்தீஸ்வரர்