தை அமாவாசையை முன்னிட்டு நாளை மறுநாள் அக்னி தீர்த்த கடற்கரையில் தீர்த்தவாரி உற்சவம்

ராமேஸ்வரம்: தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் நாளை மறுநாள் (பிப்.11) காலை 7 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். அதிகாலை 2.30 மணிக்கு ராமேஸ்வரம் கோயில் நடை திறந்து பகல் முழுவதும் தொடர்ந்து சுவாமி தரிசனம் நடைபெற உள்ளது.

ஆடி, தை மற்றும் மஹாளயா அமாவாசை நாட்களில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு திதி கொடுத்து ராமநாதசுவாமியை வழிபடுவதை பக்தர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். நாளை மறுநாள் தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் தீர்த்தமாடுவர்.

இதையொட்டி நாளை மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கு ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், தொடர்ந்து சுவாமி, அம்பாள் சன்னதியில் காலபூஜைகளும் நடைபெறும். காலை 7 மணிக்கு மேல் ஸ்ரீராமர் பஞ்சமூர்த்திகளுடன் அக்னிதீர்த்த கடற்கரை மண்டகப்படிக்கு எழுந்தருள தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது.

தொடர்ந்து அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடுதல் நடைபெறும். கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப்பின் பத்து மாதங்களுக்கு பிறகு கோயிலுக்குள் பக்தர்கள் தீர்த்தமாடுவதற்கு கோயில் நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளதாலும், நடப்பு ஆண்டின் துவக்கத்தில் வரும் முக்கிய அமாவாசை நாளாகவும் இருப்பதால் அக்னிதீர்த்த கடலில் தீர்த்தமாடுவதற்கு ஏராளமான வெளியூர் பக்தர்கள் ராமேஸ்வரம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தீர்த்தயாத்திரைக்கு வரும் பக்தர்கள் சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளுடன் போதிய இடைவெளி விட்டு கோயிலுக்குள் 22 தீர்த்தங்களில் நீராடவும், சுவாமி தரிசனம் செய்வதற்கும் தேவையான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

நாளை மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கு திறக்கப்படும் ராமநாதசுவாமி கோயில் நடை பகல் முழுவதும் திறந்திருக்கும். இதனால் பக்தர்கள் நீராடுதலும், சுவாமி தரிசனமும்  தொடர்ந்து நடைபெறும். இரவில் 8 மணிக்கு வெள்ளிரத உலாவினை தொடர்ந்து 10 மணிக்குமேல் அர்த்தஜாம பூஜை முடிந்து கோயில் நடை அடைக்கப்படும்.

Related Stories:

>