அதிமுக வெற்றிக்காக விரல்களை வெட்டிய ஏட்டு சசிகலாவுக்கு எதிர்ப்பு

சேலம்: அதிமுக வெற்றிக்காக விரல்களை வெட்டிக்கொண்டு பிரபலமான விரல்வெட்டி ஏட்டு ரத்தினம், சசிகலா தமிழகம் வர எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் உடையாப்பட்டி அடுத்த கோம்பைக்காடு பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் (72). போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்த இவர், தீவிர அதிமுக ஆதரவாளர். கடந்த 2004ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டி, அயோத்தியாபட்டணம் ராமர் கோயிலில் தனது விரல்களை வெட்டிக் கொண்டார்.  கடந்த 2007ம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெற்ற அவர், எம்ஜிஆர் வேடமிட்டுக்கொண்டு அதிமுகவிற்கு ஆதரவாக பிரசார கூட்டங்களில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில ஆண்டுகளாக பொதுவெளியில் வருவதை தவிர்த்த அவர், தற்போது மீண்டும் தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.

அதன்படி நேற்று, எம்ஜிஆர் வேடமணிந்து கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். திரும்பி போ... திரும்பி போ.. என்ற வாசகம் அடங்கிய போஸ்டரை தன்னுடன் எடுத்து வந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”அதிமுக கூட்டணி வெற்றிக்காக பல தேர்தல்களில் பிரசாரம் செய்துள்ளேன். ஜெயலலிதாவுடன் கூட இருந்தே குழி பறித்தவர் சசிகலா. அவர் தமிழகத்திற்குள் வர கூடாது. தமிழக முதல்வர் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். வரும் தேர்தலிலும் அதிமுகவுக்காக பிரசாரத்தில் ஈடுபடுவேன்” என்றார்.

Related Stories:

>