×

அமைச்சர் செல்லூர் ராஜூ தொகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு மூட்டை மூட்டையாக குப்பையில் வீசி தீவைப்பு

வாடிப்பட்டி: சமயநல்லூர் அருகே பரவை மில்காலனி பகுதியில் ரேஷன் பொருட்கள் மூட்டை, மூட்டையாக குப்பையில் வீசப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் செல்லூர் ராஜூவின் மேற்கு தொகுதிக்கு உட்பட்டது பரவை பேரூராட்சி. இங்குள்ள மில் காலனியில் பள்ளிக்கு பின்புறமுள்ள குப்பை மேட்டில் மூடை மூடையாக ரேஷன் பொருட்கள் கொட்டப்பட்டு தீவைத்து எரிப்பதை அப்பகுதி மக்கள் சிலர் கண்டனர். அதிர்ச்சியுடன் சென்று பார்த்த போது, குப்பையில் பாண்டியன் கூட்டுறவு சிறப்பங்காடி என்று பெயரிடப்பட்ட பைகளில் பருப்பு வகைகள், தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்புகள் மற்றும் அம்மா உப்பு உள்ளிட்டவை எரிந்த நிலையில் கிடந்தன. இப்பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்மநபர்கள் சிலர் சரக்கு வாகனத்தில் உலா வந்துள்ளனர். அவர்களே ரேஷன் பொருள் மூட்டைகளை குப்பையில் வீசி தீவைத்து சென்றிருக்கலாம் என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

ஏழை மக்களுக்கு கிடைக்க வேண்டிய குடிமை பொருட்களை குப்பையில் வீசி தீவைத்ததற்கு கண்டனம் தெரிவித்த அவர்கள், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். அமைச்சர் செல்லூர் ராஜுவின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவுத்துறைக்கு சொந்தமான பாண்டியன் கூட்டுறவு சிறப்பங்காடி ரேஷன் பொருட்கள் குப்பைகளில் வீசி தீவைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Cellur Raju ,constituency , Pongal gift package
× RELATED தேர்தல் பரப்புரைக்காக அமித்ஷா, மோடி என...