சச்சின் உட்பட பிரபலங்களின் டுவிட் குறித்து விசாரணை: ‘கனவு’ முதல்வராகவே காலத்தை தள்ளுங்கள்!...பட்நாவிஸ், நாராயண ரானேவுக்கு அமைச்சர் பதிலடி

மும்பை: சச்சின் உட்பட பிரபலங்களின் டுவிட் குறித்து விசாரிக்க மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்ட நிலையில், ‘கனவு’ முதல்வராகவே பட்நாவிசும், நாராயண ரானேவும் இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். விவசாயிகள் போராட்டம் தொடர்பாக சமீபத்தில் சர்வதேச பிரபலங்களின் டுவிட்டர் பதிவுகள் நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறிவருகிறது. இவ்விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட  விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் டுவிட் செய்திருந்தனர். இந்த டுவிட்டுகள் பெரும்பாலும் நிர்பந்தத்தால் வெளியிடப்பட்டதாக பல்வேறு தரப்பிலும் கருத்துகள் கூறப்பட்டன.

இந்நிலையில் இந்திய பிரபலங்கள் வெளியிட்ட டுவிட் பதிவுகள், யாருடைய நிர்பந்தத்தின் பேரில் வெளியிடப்பட்டது என்பது குறித்து விசாரிக்க மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அரசு உத்தரவிட்டுள்ளது. அதையடுத்து, பாலிவுட்  நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின்  டுவிட்டுகளில் உள்ள ஒற்றுமைகள் மற்றும் அவர்கள் பாஜகவின் அழுத்தத்திற்கு  உட்பட்டு டுவிட் பதிவுகளை போட்டார்களா? என்பது குறித்து மாநில புலனாய்வு  அமைப்பு விசாரணையை  தொடங்கி உள்ளது. இதற்கு பாஜக எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்நாவிஸ் கடும் அதிருப்தியை தெரிவித்தார்.

இவருக்கு பதிலடி அளிக்கும் வகையில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான நவாப் மாலிக் கூறுகையில், ‘தேவேந்திர பட்நாவிஸ் தான் முதல்வராக வருவேன் என்று நீண்ட காலமாக கூறி வருகிறார். ஆனால்  அவரது விருப்பம் கனவாகவே இருக்கும். அதேபோல் பாஜக மூத்த தலைவர் நாராயண ரானேவும் நீண்ட காலமாக முதல்வர் பதவி மீது ஒரு கண் வைத்துள்ளார்.

இருவரும் கனவு காணும் முதல்வராகவே காலத்தை ஓட்ட வேண்டியதுதான். கடந்த 22 ஆண்டுகளாக, நாராயண் ரானே முதல்வராக வேண்டும் என்று கனவு காண்கிறார். இப்போது தேவேந்திர பட்நாவிசும் கனவு காணும் முதல்வர் பட்டியலில்  வந்துவிட்டார். இருந்தும் கனவு காண்பது என்பது அவர்களின் உரிமை’ என்று கிண்டலாக தெரிவித்தார்.

Related Stories: