×

விவசாயிகள் விதை விதைத்து அறுவடை செய்யும் நிலையில் பாஜக கொள்ளையடித்துவிடும்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா: விவசாயிகள், நிலங்களை பாஜக கொள்ளையடித்துவிடும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாடியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் வருகின்ற ஏப்ரல், மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற  உள்ளது. மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி  தலைவருமான மம்தா பானர்ஜி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த முறை மேற்கு வங்கத்தில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பாஜகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனது.

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பர்பா பர்தாமன் மாவட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்; டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு நெருக்கடிகளை தருவதாக குற்றம் சாட்டினார். விவசாயிகள் விதை விதைத்து அறுவடை செய்யும் நிலையில் அனைத்தையும் பாஜகவினர்கள் எடுத்து சென்றுவிடுவார்கள் என்று தெரிவித்தார்.

விவசாயிகள் நலன்நிதிக்கு சரிபார்க்கப்பட்ட விவசாயிகளின் பட்டியலை அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் பாஜக தலைமையிலான மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்று மம்தா குற்றம் சாட்டினார். விவசாயிகளுக்கு நிதி வழங்க மறுப்பதாக பாஜக தவறான கருத்துக்களை பரப்புவதாகவும், ஒவ்வொரு விவசாயிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு வழங்கி வருவதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

கிசான் திட்டம் மூலம் மேற்குவங்க மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்கும் நிதியுதவியை திரிணாமுல் காங்கிரஸ் அரசு தடுப்பதாக பாஜக அரசு பொய்யுரைப்பதாகவும், இதுவரை அத்திட்டத்தின் மூலம் மாநில அரசுக்கு நிதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.


Tags : Mamata Banerjee ,West Bengal ,BJP , BJP will loot as farmers sow and harvest: West Bengal Chief Minister Mamata Banerjee
× RELATED மக்களவை தேர்தலுக்கு பின்னர்...