×

மோடி ஆட்சியில் விலைவாசி விண்ணைத் தொடுகிறது: உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

ஆண்டிபட்டி:தேனி தெற்கு மாவட்ட பகுதிக்கு ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற நிகழ்ச்சிக்காக இன்று காலை 11.15 மணியளவில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆண்டிபட்டி வந்தார். அங்கு ஆண்டிபட்டி பஸ் நிலையம் அருகே அவர் பேசியதாவது:ஆட்சி மாற்றம் கொண்டு வர மக்கள் முடிவு செய்திருக்கின்றனர். நாடாளுமன்றத்தில் இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாக திமுக விளங்குவதற்கு தமிழக மக்களே காரணம். திமுக ஆட்சியில் ரூ.400க்கு விற்கப்பட்ட சிலிண்டர் தற்போது மோடி அரசில் ரூ.800க்கு விற்கப்படுகிறது. இதேபோல் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. விலைவாசி விண்ணைத் தொடுகிறது. மேலும் கிராமப்புறத்தில் படிக்கும் மாணவர்களின் நலனுக்காக முன்னாள் முதல்வர் கலைஞர் நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று சட்டம் இயற்றினார். ஆனால் தற்போது நீட் தேர்வை கொண்டு வந்து மாணவர்களை தற்கொலைக்குத் தூண்டி விடுகிறார்கள். நீட்டுக்கு பயந்து கடந்த மூன்று வருடத்தில் 14 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.


மோடிக்கு சிறந்த அடிமை யாரென்று ஓபிஎஸ்-இபிஎஸ் இருவருக்கும் போட்டி வைத்தால் யார் வெற்றி பெறுவார்கள் என்று சொல்ல முடியாது. ஓபிஎஸ் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது அமெரிக்க கம்பெனியில் ரூ.7 கோடி லஞ்சமாக பெற்றுள்ளார்.ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று முதலில் கூறியவர் ஓபிஎஸ். ஆனால் விசாரணை ஆணையம், பத்து முறை அழைப்பு கொடுத்தும், அவர் ஆஜராகவில்லை.திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்று தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். 

இவ்வாறு அவர் பேசினார். 



Tags : Modi ,Udayanithi Stalin , உதயநிதி ஸ்டாலின்
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...