விவசாயிகள் போராட்ட விவகாரம்: கங்கனா மீது போலீசில் புகார்

பெலகாவி: விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நடிகை கங்கனா மீது கர்நாடகா போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். கர்நாடகா மாநிலம் பெலகாவி போலீசாரிடம் வழக்கறிஞர் ஹர்ஷ் வர்தன் பாட்டீல் என்பவர் பாலிவுட் நடிகை கங்கனா மீது புகார் அளித்தார். அதில், ‘டெல்லியில் போராடும் விவசாயிகளை நடிகை கங்கனா, பயங்கரவாதிகள் என்று தெரிவித்துள்ளார். இவரது பேச்சும், டுவிட்டர் பதிவும் சமூகத்தில் பகைமையை உருவாக்கும் வகையில் உள்ளது.

அவர் கடந்தாண்டு செப். 21ம் தேதி வெளியிட்ட டுவிட் பதிவில், ‘குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் தவறான தகவல்களையும், வதந்திகளையும் மத்திய அரசுக்கு எதிராக பரப்புகின்றனர். இப்போது விவசாயிகள் சட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்புகிறார்கள். இந்த நபர்கள் நாட்டில் பயங்கரவாதத்தை உருவாக்குகின்றனர். அவர்கள் பயங்கரவாதிகள்’ என்று பதிவிட்டுள்ளார். எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பெலகாவி போலீஸ் கமிஷனர் கே.தியாகராஜன் கூறுகையில், ‘நடிகை கங்கனாவுக்கு எதிராக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை எப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை. புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். இதுகுறித்து புகார்தாரர் ஹர்ஷ்வர்தன் பாட்டீல் கூறுகையில், ‘காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாவிட்டால், கங்கனா மீது தனிப்பட்ட வழக்காக பதிவு செய்ய நீதிமன்றத்தில் புகார் அளிப்பேன்’ என்றார். ஏற்கனவே  இதே விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் ரமேஷ் நாயக் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், கங்கனா மீது வழக்கு பதிவு செய்ய கடந்தாண்டு அக்டோபர் 10ம் தேதி கர்நாடக நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>