×

ராமர் பாலத்தை தேசிய புராதான சின்னமாக அறிவிக்கக்கூடாது : உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு

புதுடெல்லி :ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் புதிய இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி சார்பில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் தரப்பில் ஒரு புதிய இடைக்கால மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில்,ராமர் பாலத்தை  தேசிய புராதான சின்னமாக அறிவிக்கக்கூடாது. இது பொதுமக்களின் பயன்பட்டுக்காக கட்டப்பட்டவை கிடையாது. இது காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் மணல் திட்டுகள் மட்டுமே ஆகும். இதற்காக பல்வேறு தொல்லியல் ஆய்வு முடிவுகள் இருக்கிறது. இதைத்தவிர ராமர் பாலத்தின் ஒரு பகுதி மட்டுமே இந்திய எல்லைக்குள் உள்ளது. மீதம் உள்ள பகுதிகள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

 ஒருவேளை இது தேசிய புராதான சின்னமாக அறிவிக்கப்படும் பட்சத்தில் இந்திய எல்லைக்குள் உள்ள பகுதிகள் பாதுக்கப்படும். ஆனால், இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை எப்படி பாதுகாக்க இயலும். அதனால் இந்த விவகாரத்தில் சுப்பிரமணிய சுவாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Ramer Bridge ,National Heritage Site ,Supreme Court , ராமர் பாலம் ,உச்ச நீதிமன்றம்
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...